சீக்கியர்களுக்கு தனி தேசம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் காலிஸ்தானின் தீவிர ஆதரவாளரான அம்ரித் பால்சிங்கை கைது செய்ய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரிஸ் பஞ்சாப் டி என்ற இயக்கத்தின் தலைவராக உள்ள இவர், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார்.
விஸ்வரூபம் எடுத்த அம்ரித் பால் சிங் விவகாரம்:
இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடந்த சில நாள்களாகவே, உலகின் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களுக்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இது பதற்றத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், கனடா தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
கனடாவில் இந்திய தூதரகத்திற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தியா அதிருப்தியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்ட அறிக்கையில், "கனடா அரசாங்கம் எமது தூதர்களின் பாதுகாப்பையும் எமது தூதரகங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவல்துறை முன்னிலையிலேயே தூதர்கள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்புக்கு குளறுபடி ஏற்பட எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, காலிஸ்தான் ஆதரவாளர்களின் வன்முறைப் போராட்டத்திற்குப் பிறகு, பாதுகாப்புக் காரணங்களால் கனடாவில் ஒரு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற இந்திய வம்சாவளி பத்திரிகையாளரும் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பதற்றத்தில் பஞ்சாப்:
அம்ரித்பால் சிங்கை கைது செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், பஞ்சாம் முழுவதுமே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மட்டும் இன்றி, பிற நாடுகளிலிலும் இது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மூவர்ண கொடியை அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தூதரகத்தின் கட்டிடத்தில், 'அம்ரித்பாலை விடுதலை செய்யுங்கள்' என வாசகங்களை எழுதி சர்ச்சையை கிளப்பியுள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், தூதரக கட்டிடங்களின் கதவுகள் மற்றும் ஜன்னல் கண்ணாடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடித்து உடைப்பது போல பதிவாகியுள்ளது.
இந்தியத் தூதரகத்தின் ஊழியர்கள் மூன்று பேர், நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் கொடிகளை அகற்றுவதும் அதில் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க: Rahul Gandhi Twitter Bio: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி..! பயோவை மாற்றி ட்விட்டரை அலறவிட்ட ராகுல்காந்தி..!