பகோ ஒரு சிறு நகரம். ரங்கூனுக்கு வடகிழக்கே 80 கி.மீ தொலைவில் இருக்கிறது. கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதியன்று மட்டும் பகோ நகரில் மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடிய 82 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. ஒரு போராட்டக்காரர் "அவர்கள் எங்கள் நிழல்களைக்கூடச் சுடுகிறார்கள்" என்று சொல்லியிருக்கிறார். என்ன நடக்கிறது மியான்மரில்?


பிப்ரவரி 1-ஆம் தேதி மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. முன்னதாகத் தேர்தல் நடந்திருந்தது. தேசிய ஜனநாயகக் கட்சி (என்.எல்.டி) அமோக வெற்றி பெற்றிருந்தது. ராணுவம் தேர்தல் முடிவுகளைச் செல்லாது என்று அறிவித்தது. என்.எல்.டி-யின் தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்தது. மியான்மரின் அரசியல் வரலாறு மிகுதியும் ராணுவத்தின் கரங்களால்தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த முறையும் எதிர்ப்புகள் பெரிதாக இருக்காது, இதுவும் கடந்து போகும் என்று ராணுவம் எதிர்பார்த்தது. ஆனால், மக்கள் ராணுவத்தைக் கடந்த இரண்டரை மாதங்களாகத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ரத்த சாட்சிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுகாறும் 600-க்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் சிறை வைக்கப்பட்டு இருக்கின்றனர். போராட்டம் தொடர்கிறது, வலுக்கிறது. இப்படியெல்லாம் நடக்கும் என்று ராணுவம் எதிர்பார்க்கவில்லை. அண்டை நாடான இந்தியாவும் எதிர்பார்க்கவில்லை.  இதனால் மியான்மர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடும் மாறிவருகிறது.



காட்சிப் படம்


 


ராணுவம் புகுந்த அரசியல்


பர்மா என்பதுதான் மியான்மரின் பெயராக இருந்தது. 1948-இல் பர்மா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. 1958-இல் அப்போதைய நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டதன் பேரில் ஓர் இடைக்கால ஆட்சி நடத்திய ராணுவம், 1962-இல் தானே நேரடியாக ஆட்சியைக் கைப்பற்றியது. இது 2011வரை நீடித்தது. அந்த அரை நூற்றாண்டுக் கால ராணுவ ஆட்சி மியான்மரை உலகத்திலிருந்து தனிமைப்படுத்தியிருந்தது. கல்வியும் தொழிலும் விவசாயமும் வர்த்தகமும் தேங்கிப்போயிருந்தன. எதிர்க் குரல்கள் ஒடுக்கப்பட்டன. பேச்சுச் சுதந்திரம் பறிக்கப்பட்டது. ஊழல் மலிந்திருந்தது. சர்வதேச நாடுகளின் கண்டனங்களும் பொருளாதாரத் தடைகளும் சூழ்ந்திருந்தன. உள்நாட்டு உற்பத்தியில் கிழக்காசியாவிலேயே கடைசி இடத்தில் இருந்தது மியான்மர்.


ஜனநாயகக் கீற்றுகள்


இந்தப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கும், சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் தேர்தல் ஜனநாயகத்திற்குள் மீண்டும் அடியெடுத்து வைத்தது ராணுவ ஆட்சி. 2012-இல் நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்ட என்.எல்.டி, பெருவாரியான இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி ஆகியது. 2015-இல் ஆளுங்கட்சியுமானது. 2020இல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றது. ஆனால் 2021-இல் ஆட்சிக் கட்டிலில் ஏற முடியவில்லை. ராணுவம் ஆட்டத்தைக் கலைத்துப் போட்டுவிட்டது.


இதற்கு முன்பும் ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராடியிருக்கிறார்கள். 1988-இல் மாணவர்கள் போராடினார்கள். 2007-இல் புத்த பிக்குகள் ராணுவத்திற்கு எதிராகத் திரண்டார்கள். ராணுவத்திற்கு எதிராக நடந்த பெரிய போராட்டங்கள் இவைதான். இந்த இரண்டு போராட்டங்களையும் ராணுவம் ஒடுக்கிவிட்டது. இப்போதைய போராட்டத்தையும் அப்படி ஒடுக்கி விடலாம் என்றுதான் எதிர்பார்த்தது. ஆனால் அது அப்படி நடக்கவில்லை. மியான்மரில் வாராதுபோல் வந்த ஜனநாயகத்தை இழப்பதற்கு மக்கள் தயாராக இல்லை.


 



காட்சிப் படம்


 


இந்தியாவின் நிலைப்பாடு


மியான்மரின் நிலை இந்தியாவையும் பாதிக்கிறது. 1990 முதற்கொண்டு ராணுவ ஆட்சியுடன் இந்தியா இணக்கமாக இருந்து வருகிறது.  இதற்குக் காரணம் சீனா. மியான்மரின் ராணுவத்தோடு வெகு நெருக்கமாக இருந்து வருகிறது சீனா. மியான்மரின் எண்ணை வளமும் கனிம வளமும் ஒரு காரணம்.  சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தின் முக்கியக் கண்ணி மியான்மர் வழியாகச் செல்லவிருப்பது பிறிதொரு காரணம். ஆகவே சீனா, மியான்மரில் பெரும் முதலீடு செய்திருக்கிறது. அதனால் ஆட்சியாளர்களிடம் அபரிமிதமான செல்வாக்கும் பெற்றிருக்கிறது. இந்தச் செல்வாக்கை மட்டுப்படுத்தும் நோக்கோடுதான் இந்தியா மியான்மர் அரசோடு இணக்கத்தைப் பேணி வருகிறது. நூற்றுக்கும் அதிகமான திட்டப் பணிகளை இந்தியா மியான்மரில் மேற்கொண்டும் வருகிறது.


இந்தச் சூழலில்தான் பிப்ரவரி மாதம் ராணுவ ஆட்சி அமலானது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து ஜப்பான், தென்கொரியா முதலிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அவை பொருளாதாரத் தடைகளையும் விதித்தன. இந்தியா அப்போது தனது கவலையைத் தெரிவிப்பதோடு நிறுத்திக்கொண்டது.


உள்நாட்டு யுத்தம்


இந்த இடத்தில் மியான்மரின் இன வரைவியலைத் தெரிந்து கொள்வது, அது நேரிடும் அடுத்த ஆபத்தைப் புரிந்து கொள்ள உதவும். மியான்மர்  பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு. ‘பாமா’எனப்படும் பெரும்பான்மை பர்மிய சமூகத்தினர், மூன்றில் இரண்டு பங்கினர், புத்த மதத்தினர்,  ஐராவதி நதி பாயும் வளமான மையப் பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் வசிக்கின்றனர். இவர்கள் மூன்றில் இரு பங்கினர். பல நாடுகளைப்போல இங்கும் பெரும்பான்மை சமூகத்திற்கு மேட்டிமை மனோபாவம் இருக்கிறது.


மியான்மரில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுபான்மை தேசிய இனத்தவர் உள்ளனர். இதில் ஷான், கரீன், ரக்கைன், சின், கச்சின் இனங்கள் பிரதானமானவை. இவர்கள் எல்லைப்புற மாநிலங்களில் வசிக்கின்றனர். இந்த இனங்களில் தேர்தல் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட பல அரசியல் கட்சிகளும் பிரிவினை கோரும் பல ஆயுதக் குழுக்களும் உள்ளன. இந்த ஆயுதக் குழுக்கள் பல ஆண்டு காலமாக மியான்மர் ராணுவத்தோடு போராடி வருகின்றனர். இப்போது இவர்களும் பெரும்பான்மை பாமா இனத்தவரும் ராணுவத்திற்கு எதிராக ஒரு புள்ளியில் இணைகின்றனர். சிறான்மையினரின் தீவிரவாதக் குழுக்கள்  பெருமான்மையினரின் போராட்டத்தை ஆதரிக்கின்றனர். அரசியல் நோக்கர்கள், இப்போது நடந்து கொண்டிருக்கும் அகிம்சைப் போராட்டம் ஓர் உள்நாட்டு யுத்தமாக மாறிவிடக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.



காட்சிப் படம்


 


எல்லையில் அகதிகள்


ராணுவ அடக்குமுறையைத் தொடர்ந்து மியான்மரின் எல்லைப்புற மாநிலங்களில் வசிக்கும் சிறுபான்மையினர் இந்தியாவிற்குப் புகலிடம் தேடி வருகின்றனர்.  இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையிலான எல்லை வெகு நீளமானது (1610கிமீ). இந்த எல்லைப் பகுதியில் வேலிகள் இல்லை. சுற்றுச்சுவர்கள் இல்லை. இந்த  எல்லையோரம் அமைந்திருப்பவை மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்கள். இவற்றிலும் குறிப்பாக மிசோரம், மணிப்பூர் மக்களும் மியான்மரின் சின் இன மக்களும் ஒரு கொடியில் கிளைத்தவர்கள்.  திபெத்-பர்மீய வம்சாவளியினர். பிரிட்டிஷ் இந்தியாவில் இணைந்திருந்த பர்மா 1937-ஆம் ஆண்டில் தனிநாடாகும் வரை ஒரே மாநிலமாக வாழ்ந்தவர்கள். இப்போதும் மண உறவுகளாலும் வணிக உறவுகளாலும் பிணைக்கப்பட்டவர்கள். எல்லையின் இரு புறமும் போக்கும் வரவுமாக இருந்தவர்கள்.  ஆகவே மிசோரம், மணிப்பூர் அரசுகளால் அகதிகளைத் திருப்பி அனுப்ப முடியவில்லை. இதுவரை 3000 அகதிகள் இந்தியாவிற்குள் வந்திருக்கலாம். மியான்மர் அகதிகளை இந்தியாவிற்குள் அனுமதிக்கக்கூடாது என்றும் மியான்மர் ராணுவத்தை இந்தியா விமர்சிக்கக்கூடாது என்றும் சில இந்திய ராஜதந்திரிகள் சொல்லி வருகின்றனர்.  இதற்கு அவர்கள் பிரதானமாக நான்கு காரணங்களைச் சொல்கின்றனர்.


முதலாவதாக, இந்தியா மியான்மரை விமர்சித்தால், அது அந்த நாட்டைச் சீனாவிற்கு மேலும் நெருக்கமாக்கிவிடும் என்பது. இருக்கலாம். கடந்த மூன்று தசாப்தங்களாக இந்தியா மியான்மருக்கு வெகு அணுக்கமாகத்தான் இருந்து வருகிறது; அதனால் நமக்குப் பெரிய பலன்கள் ஏதும் விளையவில்லை. மேலும் இப்போதையப் போராட்டத்தில் மியான்மர் மக்கள்,  சீனத் தொழிற்சாலைகளின் மீதும் சீன நிறுவனங்களின் மீதும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.  சீனா, மியான்மர் ராணுவத்திற்கு வழங்கிவரும் நிபந்தனையற்ற ஆதரவுதான் காரணம். இந்தியாவும் அதே பாதையில் போவது நமது தார்மீகத் தகுதியை இழக்கக் காரணமாகிவிடும்.


அடுத்ததாக, மியான்மரை வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) ஆதரிப்பதை இந்த ராஜதந்திரிகள் சுட்டிக் காட்டுகின்றனர். உண்மைதான். அதே வேளையில் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் முதலான ஆசியான் நாடுகள் மியான்மரை விமர்சித்து வருகின்றன. மேலும் தாய்லாந்து மியான்மரைப் பகைத்துக் கொள்ளவில்லை, அதேவேளையில் அங்கிருந்து வெளியேறும் அகதிகளுக்குக் கதவடைக்கவும் இல்லை என்பதையும் கருத வேண்டும்.


மூன்றாவதாக, அகதிகளுக்குப் புகலிடம் வழங்குவது செலவு பிடிக்கும் காரியம் என்பது அவர்களது வாதம். மிசோரம், மணிப்பூர் அரசுகள் அகதிகளுக்காக மக்களிடம் நிதி திரட்டி வருகின்றன. மேலும் அகதிகளுக்கு மகாத்மா காந்தி ஊரகத் திட்டத்தில் வேலை வழங்குவோம் என்றும் சொல்கிறார் மிசோரம் முதலமைச்சர். இதை மணிப்பூர், மிசோரம் பிரச்சினையாகச் சுருக்கிவிடக்கூடாது. இது இந்தியாவின் பிரச்சினை. ஒன்றிய அரசுதான் அடைக்கலம் தேடிவரும் அகதிகளைப் பேணவேண்டும்.


கடைசியாக ராஜதந்திரிகள் சொல்வது- இது மியான்மரின் உள்நாட்டு விவகாரம், இதில் இந்தியா தலையிடக்கூடாது என்பதாகும்.  போராட்டம் பெரிதாகி வருகிறது, அது ஓர் உள் நாட்டு யுத்தமாக மாறிவிடும் அபாயமும் இருக்கிறது.  அண்டை வீட்டில் அமைதி நிலவ வேண்டும். அது அவர்களுக்கு மட்டுமில்லை, நமக்கும் நல்லது. 


ஆகவே  மாறிவரும் இந்தச் சூழலில் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக்கி இருக்கிறது. மார்ச் 31-ஆம் தேதி கூடிய ஐநா அரங்கில் மியான்மர் ராணுவ அரசை இந்தியா கண்டித்தது; உயிரிழந்த பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்தது; தலைவர்களை விடுவிக்கக் கோரியது;  பிரச்சனையை அமைதியான வழியில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கியது; மியான்மர் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பவேண்டும் என்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் கோரியது.


இது ஒரு நல்ல மாற்றம். தொடர்ந்து மியான்மரில் ஜனநாயகம் தழைக்கவும், அமைதி மீளவும் இந்தியா முயற்சிக்க வேண்டும். ராணுவ அடக்குமுறையால் எல்லை தாண்டிவரும் அகதிகளை இந்தியா பரிவுடன் வரவேற்க வேண்டும். சர்வதேச அரங்கில் மியான்மர் ஓர் இடத்தைப் பெறுவதற்கும் இந்தியா முயற்சிக்க வேண்டும். அது மியான்மர் மக்களிடத்தில் இந்தியாவை  நெருக்கமாக்கும்.


[ மு இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com ]