கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டிவருகிறது.


கடந்த சனிக்கிழமை தான் இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் டீசலை இந்தியா வழங்கியது. ஏனெனில் இலங்கையில் டீசல் கையிருப்பு முழுவதுமாகக் குறைந்ததால் அங்கு டீசல் வாகனப் போக்குவரத்தும் முடங்கியிருந்தது.


இந்நிலையில், இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  அந்நியச் செலாவணி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா எனப் பல நாடுகளிடமும் இலங்கை அரசு பெருந்தொகைகளைக் கடன் வாங்கியுள்ளது. அங்கு உணவு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. அத்துடன் கடந்த மார்ச் மாதத்தில் அங்கு பணவீக்கம் சுமார் 18.5% சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. அத்துடன் உணவு பொருட்களின் விலையும் 30.1% வரை அதிகரித்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே மற்றும் இலங்கை அரசை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். இலங்கை மக்கள் இந்த அவசர நிலை பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் திங்கள் கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களை ஆளும் அரசு முடக்கியுள்ளது. ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி, ராணுவத்தினர் 600க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.


இந்நிலையில் இந்தியா அண்மைக்காலமாக இலங்கைக்கு செய்யும் உதவிகள் குறித்து இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே கூறியதாவது:


கடந்த ஜனவரியில் இருந்து இந்தியா இலங்கைக்கு செய்துள்ள உதவிகளின் மதிப்பு 2.5 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. எரிபொருள் ரீதியாக 500 மில்லியன் அமெரிக்க டாலர் கிரெடிட் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 4 முறையாக 150,000 டன் ஜெட் ஏவியேஷன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.  மே மாதத்தில் மேலும் 5 தவணையாக எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. இவை தவிர உணவு, மருந்து, அத்தியாவசியப் பொருட்களை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இலங்கைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.


இதற்கிடையில், பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில்,  அந்நாட்டுப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளதாகவும், அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் கொடுத்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதனை அந்நாட்டு அரசு தரப்பே மறுத்துள்ளது.