இலங்கையிலிருந்து வெளியேற அந்நாட்டு அதிபர் கோட்டபயவுக்கு இந்தியா உதவி புரிந்ததாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிபர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு அவர் இலங்கையிலிருந்து தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 







  • இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு கோட்டபயவுக்கும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இந்தியா உதவி செய்ததாக வெளியான செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது. இதுகுறித்த ஊகங்களை இந்திய தூதரகம் முற்றிலுமாக மறுக்கிறது.


அரசியலமைப்பு, ஜனநாயக அமைப்புகள், விழுமியங்கள் மற்றும் வழிகளின் மூலம் வளம் மற்றும் வளர்ச்சியை அடைய விரும்பும் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்பதை வலியுறுத்தி சொல்கிறோம்.



  • நேற்று இரவு கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கோட்டபய, அவரது மனைவி, அவரது பாதுகாவலர்கள் என நான்கு பேர் Antonov-32 ராணுவ விமானத்தின் மூலம் மாலத்தீவுகளுக்கு கிளம்பியதாகக் கூறப்படுகிறது.

  • பாதுகாப்பு அமைச்சகத்தின் முழு ஒப்புதல் பெறப்பட்ட பிறகே அவர்கள் பயணம் மேற்கொண்டதாக இலங்கை அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து இலங்கை விமானப்படை வெளியிட்ட அறிக்கையில், அதிபரின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இது தொடர்பாக இலங்கை விமானப்படை ஊடக இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கை அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, அதிபர் மற்றும் அவரது மனைவி, அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாலத்தீவு வரை அமைச்சகத்தின் முழு அனுமதிக்கு உட்பட்டு சென்றுள்ளார்.


குடிவரவு, சுங்க மற்றும் ஏனைய அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்ட அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஜூலை 13ஆம் தேதி அதிகாலை விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்" எனக் குறிப்பிட்டுள்ளது.



  • புதன்கிழமை அதிகாலை மாலத்தீவில் உள்ள வேலனா சர்வதேச விமான நிலையத்தில் கோத்தபய சென்று இறங்கினார். அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியதை பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்ட ராஜினாமா கடிதத்தில் ஜூலை 11 அன்று கோட்டாபய கையெழுத்திட்டார். இன்று அவரின் ராஜினாமா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண