குடும்பத்தினருக்கு பிடிக்காத துறையில் இருந்து விலக மறுத்த 21 வயது பெண்ணை சகோதரரே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரெனாலா குர்ட் ஒகாரா பகுதியைச் சேர்ந்த ஸித்ரா என்ற 21 வயது பெண் மாடலிங் அழகி மற்றும் நடனக்கலைஞராக இருந்து வந்துள்ளார். ஆனால் ஸித்ரா இந்த தொழில் செய்வது அவரது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனை ஸித்ராவிடம் கூறி எப்படியாவது செய்ய விடாமல் தடுக்க முயன்று உள்ளனர் குடும்பத்தினர். எவ்வளவு வாதிட்டப்போதும் அவர் தனது முடிவில் உறிதியாக இருந்துள்ளார். ஆனாலும் இந்த துறையில் இருப்பது குடும்ப பாரம்பரியத்துக்கு எதிரானது, இதனால் இந்த துறையில் இருந்து விலக வேண்டும் என குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். அவர்கள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் வீட்டு பெண்கள் இது போன்ற துறைகளில் ஈடுபடுவதை விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



பல நாட்கள் இதனால் வீட்டில் சண்டையும் நடந்துள்ளதாம். அவர்களது உறவினர்களும் இது குறித்து குடும்பத்தினரிடம் பேசி உள்ளனர். உறவினர்கள் தரும் அழுத்தத்தின் காரணமாக குடும்பத்தினர் ஸித்ராவிடம் இதனை விட்டுவிடும்படியாக கேட்டு பலநாட்கள் சண்டை இட்டுள்ளனர். ஆனால் இவை எதற்கும் செவிசாய்க்காமல் தனக்கு விருப்பப்பட்ட துறையில் செயல்பட்டு வந்துள்ளார் ஸித்ரா. இந்நிலையில் பொது இடத்தில் ஸித்ராவுக்கு நடனமாடும் வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் நடனமாட அந்த வீடியோ வைரலாகி இருக்கின்றது. பொது இடத்தில் நடனமாடும் வீடியோ வைரலாகி, எப்படியோ அவரது உறவுக்காரர் கண்ணில் பட்டுள்ளது.


ஸித்ரா நடனமாடும் வீடியோவை பார்த்த உறவுக்காரர் அதிர்ச்சி அடைந்து அதனை ஸித்ராவின் சகோதரர் ஹம்சாவுக்கு செல்போன் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த ஹம்சா கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். அந்த ஆத்திரத்தை அடக்கி வைத்து, ரம்ஜான் பண்டிகையை அன்று வீட்டுக்கு வந்த ஸித்ராவிடம் கடும் வாக்குவாதம் நடத்தி உள்ளார். நடனம் மற்றும் மாடலிங் துறையை உடனடியாக கைவிட வேண்டும் என அவரை வற்புறுத்தி கடும் சண்டையில் ஈடுப்பட்டுள்ளார்.



இந்த வாக்குவாதம் உக்ரமாகி கடுமையாக முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த சகோதரன் ஹம்சா ஸித்ராவை கடுமையாக தாக்கி உள்ளார். கோபம் முற்றி துப்பாக்கி எடுத்து சித்ராவை சுட்டுள்ளார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஸித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஸித்ராவின் சகோதரர் ஹம்சாவை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஹம்சாவிடம் போலீசார் விசாரணை வருகின்றனர். நடைபெற்ற போலீசாரின் விசாரணையில் குடும்பத்தினருக்கு பிடிக்காத வேலையை ஸித்ரா தொடர்ந்து செய்து வந்ததால் கோபமடைந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தானில், அதுவும் குறிப்பாக மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் பெண்கள் தங்களது குடும்பத்தினரால் கொலை செய்யும் கொடூர சம்பவங்கள் சமீப காலங்களில் அதிக அளவில் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பெண்கள் விரும்பிய ஆணை திருமணம் செய்வதற்காக நடக்கும் ஆணவக்கொலையுடன் விரும்பிய வேலையை செய்வதற்காக கொல்லப்படும் ஆணவக்கொலையையும் எதிர்கொள்ள வேண்டிய சிக்கலில் சிக்கி உள்ளனர்.