பாகிஸ்தானில் சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றின்படி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


பாகிஸ்தானில் ஏற்கெனவே ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் கவலை தருபவையாக உள்ளன.


2 மணி நேரத்துக்கு ஒருவர் பாலியல் வன்கொடுமை


பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்திடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பாகிஸ்தானிய சேனலான SAMAA தொலைக்காட்சியின் புலனாய்வுப் பிரிவு (SIU) நடத்திய ஆய்வில் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன.


பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் ஒருபுறம் அந்நாட்டில் அதிகரிக்கும் நிலையில், தண்டனை விகிதம்  0.2 விழுக்காடு என்ற அளவில் குறைவாகவே உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதிதாக சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தரவுகளின்படி 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நாட்டில் 21,900 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதன் பொருள் நாடு முழுவதும் ஒரு நாளைக்கு சுமார் 12 பெண்கள் அல்லது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.


தண்டனை விழுக்காடு குறைவு!


இந்நிலையில் பாகிஸ்தானில் வசிக்கும் பெண்களுக்கு நிலவும் சமூக பாகுபாடு, பெண்களுக்கு உள்ள சமூகத்தைப் பற்றிய பயம் உள்ளிட்ட காரணங்களால் பலரும் புகார்கள் அளிக்க முன்வராத நிலையில், இந்த எண்ணிக்கை இன்னும் மிக அதிகமாக இருக்கலாம் எனவும் இந்த ஆய்வை மேற்கொண்ட நபர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


அந்நாட்டில் 2017ஆம் ஆண்டு சுமார் 3,327 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 2018ஆம் ஆண்டில் 4,456 வழக்குகளும், 2019ஆம் ஆண்டில் 4,573 வழக்குகளும், 2020ஆம் ஆண்டில் 4,478 வழக்குகளும், 2021ஆம் ஆண்டில் 5,169 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.


2022ஆம் ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 305 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


2022ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் உள்ள 44 நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான 1,301 வழக்குகள் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளன. 2,856 வழக்குகளில் காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும், 4 விழுக்காடு வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு வந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.


பெண்களுக்கு எதிரான பாரபட்சம்: தரவரிசையில் முதலிடம்


இந்தக் காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை விகிதம் 0.2 விழுக்காடாகவே இருந்தது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


2020ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டத்தின் தரவரிசையின்படி  நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிரான பாரபட்சமான 75 நாடுகளில் பாகிஸ்தானை முதலிடம் பிடித்தது.


இந்த ஆண்டு ஜூலை மாதம், உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்ட அறிக்கைபடி, பாலின சமத்துவத்தின் அடிப்படையில் பாகிஸ்தானை இரண்டாவது மோசமான நாடாக வரிசைப்படுத்தியுள்ளது. 146 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 145வது இடத்தில் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு இடம் முன் பாகிஸ்தான் உள்ளது.


அதிகரிக்கும் பாலின இடைவெளி, ஆணவக் கொலைகள்


பாகிஸ்தானில் மொத்தம் 107 மில்லியன் பெண்கள் வசிக்கின்றனர். பாலின இடைவெளி இவர்களில் 56.7 விழுக்காட்டினரை பாதிக்கிறது. உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர அறிக்கை தொடங்கப்பட்டது முதல் இதுவே உச்சபட்ச விழுக்காடு ஆகும்.


பாகிஸ்தானில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அந்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.


பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் 1,957 ஆணவக் கொலைகள் பதிவாகியுள்ளதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் அறிக்கை தெரிவித்துள்ளது.