பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தொடரப்பட்ட தோஷகானா வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்டை (non-bailable arrest warrants) இஸ்லாமாபாத் நீதிமன்றம் நிறுத்தி து உத்தரவிட்டுள்ளது. மேலும், மார்ச் 13- ஆம் தேதி இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இம்ரான் கான் மீது வழக்கு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். அரசியல்வாதியும் கூட. கடந்த 1996-ம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (Pakistan Tehreek-e-Insaf (PTI) ) தொடங்கினார்.
2018-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இவர் தலைமையிலான கட்சி ஆட்சியைப் பிடித்தது.நாட்டின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். ஆனால், அவரால் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியவில்லை.
விலைவாசி உயர்வு, கடும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சந்தித்தது பாகிஸ்தான். நாடே நெருக்கடியான நிலையில் இருந்தபோது, இம்ரான் கான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்ப பெற்றன. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரலில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது.
இவர் ஆட்சியில் இருந்தபோது, வெளிநாட்டு தலைவர்கள் வழங்கிய விலை உயர்ந்த பரிசு பொருட்களை பாதுகாக்கும் தோஷ்கானாவிடமிருந்து (Toshakhana) அவற்றை மலிவு விலையில் விற்றதாக அவர் மீது குற்றச்சாடு எழுந்தது.
இம்ரான் கான்
தேர்தல் ஆணையத்தில் அளித்த விளக்கத்தில், ‘‘கருவூலத்தில் இருந்த பரிசு பொருட்களை ரூ.2.15 கோடிக்கு வாங்கினேன். அவற்றை ரூ.5.8 கோடிக்கு விற்பனை செய்தேன்" என்று தெரிவித்திருந்தார்.
இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்ற அவமதிப்பு
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இம்ரான் கானை கைது செய்ய கடந்த பிப்., 28 ஆம் தேதி மாவட்ட நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்தது. ஏனெனில், இந்த வழக்கில் இம்ரான் கான் ஒருமுறை கூட நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை. அவர் நேரில் வரவேண்டும் என்று மூன்று முறை உத்தரவிட்டப்பட்டும், அவர் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டை நீதிமன்றம் பிறப்பித்தது. அவரை கைது செய்ய சென்ற போலீசாரிடம் கட்சியினர் இம்ரான் கான் 7-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜார் ஆவார் என்று கூறியிருக்கின்றனர்.
இஸ்லாமாபாத் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் இம்ரான் கான் தன்மீதான அரஸ்ட் வாரன்டை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.இதன் விசாரணையில் கைது வாரன்டை ரத்து செய்வதற்கு இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும் என்று கூறி நீதிபதி, மனுவை தள்ளுப்படி செய்தார்.
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமெர் ஃபரூக் (Aamer Farooq) இம்ரான் கான் தரப்பினரின் மனுவை விசாரித்தார். அப்போது,பி.டி.ஐ. கட்சியின் தலைவர் இம்ரான் கான் வரும் 13 ஆம் தேதி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, அவர் தரப்பினர் நான்கு வார கால அவகாசம் கேட்டிருந்ததற்கும் அனுமதி மறுத்துவிட்டார். மேலும், இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று அவர்மீது மாவட்ட அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டையும் நிறுத்தி வைத்தனர்.
மேலும், மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் பிடி வாரன்ட் அவரை கைது செய்வதற்கில்லை என்றும், நீதிமன்ற விசாரணையின் போது நேரில வராமல் இருந்ததற்காக நடவடிக்கை எடுக்கப்படுவதாகா வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார். இம்ரான் கான் நான்காவது முறையாகவும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதையும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.