பாகிஸ்தானில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட விவகாரம் நாட்டையே புரட்டி போட்டுள்ளது. நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து இம்ரானை கானை இஸ்லாமாபாத் காவல்துறை கைது செய்தது. 


இம்ரான் கான் கைது செய்யப்பட்டதோடு அதை தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இம்ரான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். 


பாகிஸ்தானை அதிரவிட்ட இம்ரான் கான் கைது: 


சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல்  நிலவி வருகிறது.


ஊழல் வழக்கில் தன்னை கைது செய்ததற்கு எதிராக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் இம்ரான் கான் வழக்கு தொடர்ந்தார். இச்சூழலில், இம்ரான் கானை 1 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல், நீதிபதிகள் முகமது அலி மசார், அதர் மினல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்தது.


இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானை காவலில் எடுத்ததற்கு நீதிபதிகள், கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். விசாரணையின் தொடக்கத்தில் பேசிய தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல், "நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஒரு நபரை எப்படி கைது செய்ய முடியும்" என கேள்வி எழுப்பினார்.


பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி:


தொடர்ந்து பேசிய நீதிபதி மினல்லாஹ், "ஒருவருக்கு நீதிக்கான உரிமையை எப்படி மறுக்க முடியும்?" என கேள்வி எழுப்பினார். நீதிமன்ற பதிவாளரின் அனுமதியின்றி எவரையும் நீதிமன்றில் இருந்து கைது செய்ய முடியாது எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் இம்ரான் கான் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.


பின்னர், நடைபெற்ற விசாரணையில், இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என அறிவித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நாளை அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் நாட்டிற்காக உலகக்கோப்பையை வென்று தந்த இம்ரான்கான் 1996ம் ஆண்டு தெஹ்ரீக் –இ – இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். இவரது கட்சி 2018ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, இம்ரான்கான் பாகிஸ்தான் நாட்டின் 22வது பிரதமராக பதவியேற்றார். அந்த நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ம் ஆண்டு இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.


இம்ரான்கான் பிரதமராக இருந்த காலத்தில் அரசு முறை பயணமாக சில வெளிநாடுகளுக்கு சென்றார். பாகிஸ்தான் சட்ட விதிப்படி, அந்தநாட்டு பிரதமராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது வழங்கப்படும் பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி.


அந்த பரிசுப்பொருட்களை சேமித்து பராமரிக்கும் பணியை “தோஷகானா” செய்து வருகிறது. ஆனால், இம்ரான்கானோ அதை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் தன்னுடைய சொந்த கணக்கில் சேர்த்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.