அமெரிக்காவின் உயரமான மனிதர் உயிரிழந்தார். அவருக்கு வயது 38. ஐகர் வாவ்கோவ்வின்ஸ்கி 1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உக்ரைன் நாட்டில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்த அவர் தனது தாயாருடன் அமெரிக்காவில் வசித்துவந்த அவர் இருதய நோயால் உயிரிழந்தார். 


இதனை மினசோட்டா மாகாணத்தில் உள்ள மாயோ கிளினிக்கில் செவிலியராகப் பணியாற்றி வரும் ஐகரின் தாயார் ஸ்வெட்லானா உறுதி செய்தார். இவர் அங்கு ஐசியுவில் சிறப்பு செவிலியாகப் பணியாற்றி வருகிறார். 
1989 ஆம் ஆண்டு வாவ்கோவ்வின்ஸ்கி ஒரு குழந்தையாக மாயோ கிளினிக்குக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு பிடியூடரி சுரப்பியில் ட்யூமர் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. அந்தக் கட்டியால் அவருக்கு வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் அதிகமாக சுரந்தது. இதனால் ஐகர் மிக உயரமாக வளர்ந்தார். இதனால் அமெரிக்காவின் மிக உயரமான மனிதரானார் ஐகர். அவரது உயரம் 7 அடி.


ஐகர் குறித்து அவரது சகோதரர் ஓலே லாடன் கூறும்போது, உக்ரைனில் இருந்து நாங்கள் அமெரிக்கா வந்தபோது, ஐகரை எல்லோரும் ஒரு செலிப்ரிட்டி போல் பார்த்தனர். காரணம் அவனது உயரம். அதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. ஐகர் எல்லாரையும் போல் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்திருக்கவே நான் விருப்பப்பட்டேன்.
2009ல் பராக் ஒபாமா நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது வாவ்கோவிஸ்கி உலகின் மிக உயரமான ஒபாமா ஆதரவாளர் என்ற டிஷர்ட் அணிந்து கலந்து கொண்டார். அப்போது அவர் ஒபாமாவின் கவனத்தைப் பெற்றார். ஒபாமாவும் அவரை அழைத்துப் பேசினார்.




2013ல் வாவ்கோவிஸ்கி யூரோவிஷன் பாடல் போட்டியில் கலந்து கொண்டார். அவருக்கு 27 வயது இருக்கும் போது நியூயார்க் சென்று கின்னஸ் உலக சாதனை அலுவலகத்தில் தனது உயரத்தை நிரூபித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வர்ஜினியாவைச் சேர்ந்த ஷெரீஃப் ஐகரைவிட 1 இன்ச் மட்டுமே குறைவான உயரம் கொண்டிருந்தார்.


செருப்பு சைஸ் 26:


வாவ்கோவின்ஸ்கியின் செருப்பு சைஸ் 26. கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் தனது கால்வலியைப் போக்க பிரத்யேக செருப்பு வாங்க வேண்டும், அதற்கு 16,000 டாலர் செலவாகும் என்று கூறி பொதுமக்களிடம் நிதியுதவி கோரியிருந்தார். அவருக்குப் பலரும் தாராளமாக உதவி செய்தனர். ரீபாக் நிறுவனம் அவருக்கு கஸ்டமைஸ்டு ஷூவை இலவசமாக ஸ்பான்சர் செய்தது.


கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் படி உலகின் மிக உயரமான மனிதர் துருக்கியைச் சேர்ந்த சுல்தான் கோசென். இவரது உயரம் 8 அடி 2 அங்குலம். அதேபோல் இதுவரை உலகம் கண்ட மிக உயரமான மனிதரின் உயரம் 8 அடி 11 அங்குலம். இவர் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர். ராபர்ட் பெர்ஷிங் வாட்லோ என்ற அந்த நபர் 1940 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 22.