ஈரான் தனது ஏவுகணை திட்டத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றால், அது "மிகவும் சக்திவாய்ந்த" விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஈரான் உச்ச தலைவர் காமேனியும் பதிலடி கொடுத்துள்ளார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.
ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை என்ன.?
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவால் தாக்கி அழிக்கப்பட்ட தளங்களுக்கு பதிலாக, வேறு இடங்களில் ஈரான் அதன் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தை மீண்டும் கட்டமைக்க முயற்சிக்கக்கூடும் என்ற செய்திகள் வெளியான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "ஈரான் மீண்டும் கட்டமைக்க முயற்சிப்பதாக இப்போது கேள்விப்பட்டேன். அப்படி இருந்தால், நாம் அவர்களை வீழ்த்த வேண்டும். நாம் அவர்களை வீழ்த்துவோம். ஆனால், அது நடக்காது என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், "நான் அதை சொல்ல விரும்பவில்லை.. ஆனால், ஈரான் மோசமாக நடந்து கொண்டிருக்கலாம். அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அப்படி அது உறுதிப்படுத்தப்பட்டால், அதன் விளைவுகள் அவர்களுக்கு தெரியும். விளைவுகள் சக்திவாய்ந்ததாக இருக்கும். ஒருவேளை கடந்த முறையை விட சக்திவாய்ந்ததாக இருக்கலாம். ஈரான் கடந்த முறை ஒரு ஒப்பந்தத்தை செய்திருக்க வேண்டும். நான் அவர்களுக்கு ஒரு விருப்பத்தைக் கொடுத்திருந்தேன்," என்று ட்ரம்ப் கூறினார்.
அதோடு, "நான் படித்துக்கொண்டிருப்பது போல, ஈரான் ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களை கட்டமைத்து வருவதாகக் கூற முயற்சிக்காது என்று நம்புகிறேன்," என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஈரானின் பதிலடி என்ன.?
இதற்கிடையே, டிரம்ப்பின் அச்சுறுத்தலை அடுத்து, நாட்டிற்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும் "உடனடி கடுமையான பதிலடியை" எதிர்கொள்ளும் என்று ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் உயர் அரசியல் ஆலோசகர் அலி ஷம்கானி கூறியுள்ளார்.
ஈரானின் ஏவுகணைத் திறனும், பாதுகாப்பும் கட்டுப்படுத்தக்கூடியவை அல்லது அனுமதி அடிப்படையிலானவை அல்ல என்றும், எந்த ஒரு அச்சுறுத்தலும் அது செயல்படுத்தப்படுவதற்கு முன்னரே உடனடி கடுமையான பதிலை எதிர்கொள்ளும் என்றும், எந்த ஒரு ஆக்கிரமிப்பும் திட்டமிட்டவர்களின் கற்பனைக்கு அப்பார்பட்ட உடனடி பதிலடியை எதிர்கொள்ளும் எனவும் அலி ஷம்கானி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கா, ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கியது. பெரிதும் பலப்படுத்தப்பட்ட நிலத்தடி தளமான ஃபோர்டோவின் மீதான தாக்குதலில், 30,000 பவுண்டுகள் எடையுள்ள "பதுங்கு குழியை அழிக்கும்" 6 குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இவை, அமெரிக்க விமானப்படையின் B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களால் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள்.
இருந்தாலும், ஈரான் மீண்டும் தனது பாலிஸ்டிக் ஏவுகணை நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதாகவும், ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தைகளின் போது, கடுமையான நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுப்பார் என்றும் நெதன்யாகு சமீபத்தில் எச்சரித்துள்ளார்.