உக்ரைனில் மருத்துவம் படிக்கும் கேரள மாணவி ஒருவர், தனது செல்ல நாயை பல தடைகளை கடந்து தன்னுடன் அழைத்து வந்துக் கொண்டிருப்பது அனவைரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கடந்த 24-ம் தேதி முதல் உக்ரைன் - ரஷ்யா இடையே ராணுவத் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. "சிறப்பு இராணுவ நடவடிக்கைகள்" என்ற போர்வையின் கீழ், உக்ரைன் மீது ரஷ்யா இந்த படையெடுப்பைத் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பு செயலிழந்தபோதிலும், ராணுவ வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப் போரில் உக்ரைன் நாட்டின் பொதுமக்களும், துப்பாக்கிகளை ஏந்தி ரஷ்யாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். ரஷ்யாவின் உக்கிரமான தாக்குதலில், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கெர்சன், கார்கெவ் உள்ளிட்ட நகரங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், உக்ரைன் மீது தற்போது ரஷ்யா போர் தொடுத்திருப்பதன் காரணமாக, அங்குள்ள ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் தாய்நாடு திரும்பி வருகின்றனர்.
இவ்வாறு இந்தியா திரும்ப வேண்டுமெனில், அந்த மாணவர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து தான் விமானம் மூலம் தாய்நாடு வர வேண்டும். இதற்கு பல விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், இந்திய மாணவர்கள் இன்னலுக்கு உள்ளாகி வருகிறார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது, மாணவர்கள் தங்களுடன் நாய், பூனை, கிளி உள்ளிட்ட செல்லப் பிராணிகளை அழைத்து வருவது என்பது மேலும் கடினமான செயல் ஆகும். இதன் காரணமாக, பலரும் தங்கள் செல்லப் பிராணிகளை ஆதரவற்ற நிலையில் அப்படியே விட்டுவிட்டு வருகிறார்கள். இந்நிலையில், உக்ரைனில் மருத்துவம் பயிலும் கேரளாவைச் சேர்ந்த ஆர்யா அல்டிரின் என்ற மாணவி, தான் ஆசையாக வளர்க்கும் சைபீரியன் ஹஸ்கி இனத்தைச் சேர்ந்த 5 மாத குட்டி நாயை, தன்னுடன் இந்தியா அழைத்து வருவதற்காக பல சிரமங்களை எதிர்கொண்டு இருக்கிறார். உக்ரைன் போர் தொடங்கிய கடந்த வாரமே, மாணவி ஆர்யா அல்டிரின் தாய் நாடு திரும்புவதற்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், செல்ல நாயை அழைத்து செல்ல அனுமதி இல்லை என்பதால் அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
இதையடுத்து, தன்னுடன் நாயை அழைத்து செல்வதற்கு தேவையான ஆவணங்களை, போர் நடந்து வரும் சமயத்திலும் பல இடங்களுக்கு அலைந்து திரிந்து போராடி பெற்றிருக்கிறார். அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிட்ட சூழலில், தற்போது ஆர்யா அல்டிரின் தனது செல்ல நாய் சாய்ராவை ருமேனியா நாட்டுக்கு பேருந்தில் கொண்டு சென்றுவிட்டார். அங்கிருந்து புறப்படும் விமானத்தில் அவர் இந்தியா வரவிருக்கிறார். நாய் மீது அவர் வைத்த பாசமும், நாய் தானே என்று விட்டுவிடாமல் அதனை அழைத்து வர வேண்டும் என்று விடாமல் போராடிய குணமும் மாணவி ஆர்யாவை எல்லோராலும் புகழ வைத்துள்ளது. அவர் நாயுடன் பிளைட்டில் வரும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.