பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இம்ரான் கானின் உதவியாளர் ஷாபாஸ் கில் அண்மையில் தேச விரோத வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட ஷாபாஸ் கில்லுக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கபட்டார் என இம்ரான் கான் கட்சி குற்றம் சுமத்தியது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான் கான் தலைமையில் கடந்த சனிக்கிழமை பேரணி நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த பொதுக் கூட்டத்தில், அந்நாட்டின் பெண் நீதிபதி, போலீஸ் அதிகாரிகள், தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்தார்.
பேரணியில் பேசும்போது, உயர் நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி ஜெபா சவுத்ரியை மிரட்டியதாக இஸ்லாமாபாத் சதார் மாஜிஸ்திரேட் அலி ஜாவேத் அளித்த புகாரின் பேரில் பிடிஐ தலைவர் இம்ரான் கானுக்கு எதிராக பயங்கரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கைதாகும் சூழல் ஏற்பட்டது. நீதிபதியை மிரட்டிய வழக்கில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இஸ்லமாபாத் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. செப்டம்பர் 1 வரை இடைக்கால தடை உள்ளது. அதற்காக இம்ரான் கான் ரூ.1 லட்சத்துக்கான பிரமாணப் பத்திரமும் கொடுத்துள்ளார்.
கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிமாக தப்பித்த இம்ரான் கான் மீண்டும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார்.
இம்ரான் கான் அளித்த அண்மை பேட்டி ஒன்றில், "நான் மிகவும் ஆபத்தானவர். நாட்டின் மிகப் பெரிய கட்சியின் தலைவரைக் கைது செய்ய சிலர் முயற்சிக்கின்றனர். இதை உலகம் முழுவதும் பார்த்து சிரிக்கிறது. என்னை எப்படியாவது நாக் அவுட் செய்ய வேண்டும் அரசு கங்கனம் கட்டியுள்ளது" என்று பேசியுள்ளார். இதுதான் இப்போது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
சமீப காலமாகவே இம்ரான் கான் சர்ச்சைப் பேச்சுகளின் நாயகர் ஆகிவிட்டார். அண்மையில் அவர் ஒரு பாட்காஸ்டில் பேசுகையில் தன்னைத் தானே கழுதையுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.
அந்த பாட்காஸ்டில் அவர், ”பிரிட்டன் நாட்டில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் ஒருபோதும் பிரிட்டனை எனது சொந்த வீடாக கருதியதில்லை. நான் என்றுமே முதலில் பாகிஸ்தானிதான். கழுதை தன் உடம்பில் கோடு போட்டுக்கொண்டால் வரிக்குதிரை ஆக முடியாது. கழுதை எப்போதும் கழுதையாகத் தான் இருக்கும்" என்று கூறியிருந்தார்.
அதற்காக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். தற்போது அவர் தன்னைத் தானே ஆபத்தானவன் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே தன் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு உள்ளது போல் அவர் இப்படிப் பேசியிருப்பது அவரது கட்சிக்கு உள்ளேயே சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.