வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அந்த தாழ்வு பகுதி வருகிற 19ம் தேதி தமிழ்நாடு கடலோர பகுதிகளை நெருங்க உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் வருகிற 18ம் தேதி வரை மிதமான மழை பெய்யும். 


தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வருகிற 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் மிதமான வானிலையும் (காற்றின் வேகம் மணிக்கு 40-45 கிமீ முதல் 55 கிமீ வரை) நிலவும் எனவும் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் இந்த செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


14-16 தேதிகளில் அந்தமான் & நிக்கோபார் பகுதியிலும், 19, கடலோர தமிழகத்திலும் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் வருகிற 19ம் தேதி தமிழ்நாடு கடலோர பகுதிகளை நெருங்க இருக்கிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை கடலோரம் மற்றும் அதன் உள்பகுதிகளில் 19 ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும், இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளிலும், நாளை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் மணிக்கு 65கிமீ வேகம் வரை சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


16.11.2022 முதல்  18.11.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


16.11.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய அந்தமான் கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


17.11.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


18.11.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


ஏரிகளில் நிலவரம் என்ன..? 


கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து முதல் கட்டமாக 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. படிப்படியாக இந்த தண்ணீர் திறந்து விடப்பட்டு 700 கன அடியாக உயர்ந்துள்ளது.  தற்பொழுது ஏரிக்கு நீர்வரத்து 1003 கன அடி குறைந்துள்ளது. ஏரியின் நீர்மட்டம்  20.91 அடியை எட்டியுள்ளது.. நீர்வரத்து குறைந்தது எதிரொலியாக ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு 804 கனஅடியாக நீர் வெளியேறி வருகிறது.


பூண்டி


பூண்டி ஏரியில் இருந்து 53கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 


புழல்  ஏரி 


 நீர்வரத்து 710 கன அடியாக உள்ளது. வெளியேற்றம் 500 கன அடியாக உள்ளது.