இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராகப் போராடிய முன்னாள் எம்.பி. ஹிருணிகா பிரேமசந்திரா, போராட்டக் களத்தில் மாராப்பு விலகி மார்பகங்கள் தெரிந்த நிலையில் அதனை புகைப்படமாக எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இன்னும் சிலர் வக்கிரத்தின் உச்சம் தொட்டு அழகான மார்பகங்கள் என்று விமர்சித்திருந்தனர்.


இந்நிலையில் இது குறித்து ஹிருணிகா பிரேமசந்திரா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் எனது மார்பகங்கள் குறித்து பெருமை கொள்கிறேன். நான் இந்த மார்பகங்களைக் கொண்டு தான் மூன்று அழகான குழந்தைகளுக்கு பால் கொடுத்து வளர்த்து ஆளாக்கி இருக்கிறேன். இந்த மார்பகங்கள் தான் அவர்களை ஆறுதல் படுத்தியது. எனது உடலை அவர்களுக்காக நான் அர்ப்பணித்துள்ளேன். 


எனது மார்பகங்கள் வெளியில் நான் போராட்டக் களத்தில் இருந்தபோது எதேச்சையாக வெளியில் தெரிந்ததை வைத்து சிலர் மோசமான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். நான் போலீஸாருடன் போராடிக் கொண்டிருந்தேன். அப்போது என் சேலை விலகியுள்ளது. இது எப்படி அவர்களுக்கு விரசமாகத் தெரிந்தது. எனது மார்பகங்களை விமர்சிப்பவர்கள் குழந்தையாக இருந்தபோது ஒரு தாயின் மார்பில் பால் குடித்தவர்கள் தானே.
எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். என்னைவைத்து மீம்ஸ் செய்யலாம், விமர்சிக்கலாம். ஆனால் நீங்கள் அதை செய்து கொண்டிருக்கும் நேரம் ஒரு அப்பாவி இலங்கை குடிமகன் வரிசையில் அத்தியாவசியப் பொருளுக்காக காத்திருந்து உயிரிழந்திருப்பார்” என்று பதிவிட்டுள்ளார்.




இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அங்கு பெட்ரோல், டீசல், எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்காக அன்றாடம் வரிசைகளில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைக்குக் கூட வழியில்லை. பல மணி நேர மின்வெட்டு என்று கடுமையான நெருக்கடி நிலவுகிறது.


கைவிரித்த பிரதமர்:


இலங்கை பிரதமரான ரணில் விக்கிரமசிங்கே தற்போது நாட்டின் நிதியமைச்சராகவும் இருக்கிறார். இலங்கையில் தொடரும் கடும் பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்கவும், அதிலிருந்து மீளவும் நிதியமைச்சரின் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. அதன் தேவையை உணர்ந்து, நாட்டின்  நிதியமைச்சராக ஒருவரை நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் யாரும் பதிவியை ஏற்க முன்வராததால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூடுதலாக நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்றார்.


பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. ஆனால், இறக்குமதி செய்தாவது எண்ணெய்யை வாங்கக் கூட பணமில்லாத சூழலில் உள்ளதாக அந்நாட்டு பெட்ரோலியத் துறை கைவிரித்துள்ளது. இந்நிலையில், எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சார, உணவுப் பற்றாக்குறையை தாண்டி இலங்கை பொருளாதாரம் முற்றிலுமாக சிதைந்துவிட்டது என்று பிரதமரும், நிதியமைச்சருமான ரணில் தெரிவித்துள்ளார்.