சாலையின் நடுவே நூற்றுக்கணக்கான குரங்குகள் திரண்டு மோதலில் ஈடுபட்டதால் தாய்லாந்தில் சில மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.


சாலையில் திரள்வது, ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது இவையெல்லாம் மனிதருக்கே உரித்தான செயலாக இருக்கும் சூழலில் மனிதரைப் பார்த்து கற்றுக்கொண்டது போல் தாய்லாந்தில் குரங்கள் சாலையில் சண்டையிட்டுக் கொண்டன. இந்த சண்டையைப் பற்றி விவரித்த நேரில் பார்த்த நபர் ஒருவர், பொதுவாக கேங் வார் எல்லாம் மனிதர்களுக்குள் தான் நடக்கும். ஆனால், அன்று சாலையில் இரண்டு குழுக்களாக குரங்குகள் பிரிந்து கொண்டு சண்டையிட்டன. அதனைப் பார்க்கவே ஆச்சர்யமாகவும் சற்றே பயமாகவும் இருக்கிறது. குரங்குகள் இருந்த கோபத்தைப் பார்த்து யாரும் நெருங்கி விரட்ட முற்படவில்லை. இதனால், குரங்குகள் மோதல் மற்றி போக்குவரத்து ஸ்தம்பித்தது என்று விவரித்துள்ளார். சண்டைக் காட்சிகளை படமாகப் பிடித்த விஸ்ருத் சுவான்பக் என்ற இளைஞர் அதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். அதனைப் பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதனைப் பகிர்ந்தனர். வீடியோ வைரலானது.


எங்கே நடந்தது..


தாய்லாந்து நாட்டின் பிராங் சாம் யோட் எனுமிடத்தில் ஃப்ரா கான் கோயில் உள்ளது. இந்தக் கோயில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் இருக்கிறது. இந்தக் கோயிலைச் சுற்றி எப்போதுமே ஆயிரக் கணக்கான குரங்குகள் இருப்பது வழக்கம். கோயில் பரபரப்பாக இருந்த சூழலில் குரங்குகளுக்கு பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் பழங்கள், உணவுகளை கொடுத்து வந்தனர். ஆனால், தாய்லாந்தில் கொரோனா தொற்றால் கடந்த சில மாதங்களாகவே இந்த சுற்றுலா தலம் முடங்கிவிட்டது. இதனால், குரங்குகள் பசியால் பட்டினியால் வாடி வந்துள்ளன. இந்நிலையில், இந்த சண்டை உணவுக்கான மோதலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 


குரங்குகள் மோதல் வீடியோவைப் படம் எடுத்தவர் சாலைக்கு மறுபுறம் இருந்த உயரமான கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தூய்மைப் பணியில் இருந்துள்ளார். அப்போது தான் அவர் அந்த சண்டையைப் பார்த்துள்ளார். ஃப்ரா கான் கோயில் பகுதியில் குரங்குகள் மோதல் சகஜம் தான் என்றாலும் கூட தனது வாழ்நாளுக்கும் இத்தகைய மோதலைப் பார்த்தது கிடையாது எனக் கூறுகிறார். குரங்குகள் மனிதர்களைப் போலவே பலப்பரீட்சையில் ஈடுபட்டு சண்டையிட்டது ஆச்சர்யமளிப்பதாக அவர் கூறியிருக்கிறார்.


இரண்டு குழுக்களும் மோதிக் கொண்டதில் பல குரங்குகள் காயமடைந்ததாகவும் சாலையில் ரத்த வெள்ளம் பெருகியதாகவும் அந்த நபர் கூறியிருக்கிறார். வாகன ஓட்டிகள் சத்தமாக ஹார்ன் ஒலி எழுப்பியும் கூட குரங்குகள் அசரவில்லையாம். கடைசியில் ஒரு குரங்குக் கூட்டத்தின் தலைவர் தோல்வியை ஒப்புக் கொண்டு அதன் ஆதரவாளர்களுடன் சென்ற பிறகே சண்டை ஓய்ந்துள்ளது. இது குறித்து தாய்லாந்து தேசியப் பூங்காவின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, லோப்பூரி முழுவதுமே அவ்வப்போது குரங்கு சண்டை நடைபெறுவது வழக்கமே. யார் அதிகாரம் மிக்கவர் என்பதை நிரூபிக்கவும், உணவுக்காகவும், பெண் குரங்குக்காகவும் இப்படி சண்டை போட்டுக் கொள்ளும். இந்த முறை இச்சண்டை பெரிய அளவில் நடந்துள்ளது. அவ்வளவே என்று கூறினார்.