ரஷ்யாவில் அதிபர் புடினுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆயிரத்து எண்ணூறு பேர் கைது செய்யப்பட்டனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று போர் தொடங்கிய நிலையில் ரஷ்யா உக்ரைனின் தலைநகர் கிவைவை நெருங்கி உள்ளது. தலைநகருக்கு மேலே ரஷ்யா ஏவுகணைகளை வீசி தாக்கி வருகிறது. ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைனின் 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச்செய்யப்பட்டன. இவற்றில் விமானப்படையின் 11 விமான நிலையங்கள், 3 கட்டளை சாவடிகள், கடற்படைகளுக்கான அடிப்படை மையம், வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளின் 18 ரேடார் நிலையங்கள் அடங்கும். மத்திய கீவ் பகுதியில் அமைந்துள்ள ராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகமும் ரஷியாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை. இந்நிலையில் உக்ரைன் மீது புடின் தாக்குதலைத் தொடங்கியதை அடுத்து, பல ரஷ்ய ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் மக்கள் வீதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.



உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்கு ரஷ்ய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட 56 நகரங்களில் அதிபர் புடினுக்கு எதிராக கோஷம் எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் ஈடுபட்ட ஏறக்குறைய 1,400 ஆர்ப்பாட்டக்காரர்களை ரஷ்ய போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 51 நகரங்களில் 1,391 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், எதிர்க்கட்சி பேரணிகளில் கைது செய்யப்பட்டவர்களைக் கண்காணிப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் அதிபருக்கு எதிராக போராடியதாக ஆயிரம் பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படுள்ளது, அங்கு 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும், இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சுமார் 340 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 



போராட்டங்களில் ஈடுபடும் ரஷ்யர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிபர் புடின், உக்ரைனில் ரஷ்ய மக்கள் மீது நடத்தப்படும் இனப் படுகொலைகளை தடுக்கவே ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் அமெரிக்கா நேற்று ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்திருந்தது. அமெரிக்காவில் உள்ள ரஷ்யாவின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் எனவும், நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் அமெரிக்கா பாதுகாக்கும் என சபதமேற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள சூழலில் பைடனின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, மாஸ்கோவிற்கு வெளியே உள்ள ஒரு தண்டனைக் காலனியில் இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.