துபாய் நாட்டின் ஜெபல் அலி என்ற பகுதியில் கட்டப்பட்டுவந்த இந்து கோயில் இன்று திறப்புவிழா காண்கிறது. தசரா விழாவை ஒட்டி இந்துக் கோயில் இன்று திறக்கப்படுகிறது. இந்த திறப்புவிழாவில் துபாயின் சகிப்புத்தன்மை மற்றும் ஒத்துவாழ்தல் துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் கலந்து கொள்கிறார். அவருடன் ஐக்கிய அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் கலந்து கொள்கிறார்.


இந்தக் கோயில் சிந்தி குரு தர்பார் கோயிலின் விரிவாக்கம் தான். சிந்தி குரு தர்பார் கோயில் தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் பழமையான இந்து கோயிலாகும். இந்தக் கோயிலுக்கான அடிக்கல் பிப்ரவரி 2020ல் நாட்டப்பட்டது. இந்தக் கோயில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் பொதுமக்களின் தரிசனத்திற்காக திறக்கப்படும். இந்தக் கோயிலுக்குள் இந்துக்கள் மட்டுமல்ல அனைத்து மத மக்களும் வரலாம். கோயிலில் உள்ள 16 தெய்வங்களின் சிலை வைக்கப்பட்டுள்ளது.  இந்த கோயில் வெள்ளை சலவைக் கற்களாலும் அலங்கார தூண்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. அரபி மற்றும் இந்து கட்டிடக் கலைகள் இணைந்து கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.






கோயில் நிர்வாகம் சார்பில்  QR-code அடிப்படையில் தரிசனத்துக்கான புக்கிங் முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கலாம் என்று இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோயிலின் பிரதான பிரார்த்தனைக் கூடத்திலேயே நிறைய கடவுளரின் சிலைகள் வைக்கப்பட்டுவிட்டன. 3டி ப்ரின்டட் பிங்க் லோட்டஸ் மத்திய கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. துபாயின் பிரதான இந்துக் கோயிலான இக்கோயில் தினமும் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


கோயிலில் தரிசனம் மேற்கொள்ள விரும்புவோர் நாளை முதல் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம். கோயிலில் 1000 முதல் 1200 பேர் வரை தினமும் தரிசனம் மேற்கொள்ளலாம். இந்தக் கோயில் ஜெபல் அலி என்ற இடத்தில் வொர்ஷிப் வில்லேஜ் 'Worship Village' என்ற பெயரில் அமையப்பெற்றுள்ளது.
இந்தக் கோயிலில் சீக்கியர்களின் புனித நூலான குரு க்ரந்த் சாஹிப் நூலும் இருக்கிறது.