அதானி நிறுவனம் செய்த பங்கு கையாளுதல் குறித்து ஹிண்டர்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால், அதானி நிறுவனம் மிகப்பெரிய சரிவை கண்டது. இந்தநிலையில், மீண்டும் ஒரு முக்கிய ஆய்வறிக்கையை வெளியிட போவதாக ஹிண்டர்பர்க் நிறுவனம்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதன்மூலம் பங்கு சந்தையில் என்ன ஆகுமோ என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 


இதுகுறித்து ஹிண்டர்பர்க் நிறுவனம் வெளியிட்ட பதிவில், “ விரைவில் புதிய அறிக்கை வெளியிடப்படும். இதுவும் மிகப்பெரியது” என பதிவிட்டு இருந்தது. இந்த அறிக்கையானது எப்போது வெளியிடப்படும் என்ற நேரம், காலம் எதுவும் குறிப்பிடவில்லை. மேலும், இது எது குறித்தான அறிக்கை என்பதையும் தெரிவிக்கவில்லை. 



முன்னதாக, அமெரிக்காவை தளமாக கொண்ட ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம், அதானி குழும மிகப்பெரிய அளவிலான கணக்கு மோசடி மற்றும் பங்கை கையாண்டதாக குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் மூலம் அதானி குழும நிறுவனங்களில் பங்குகள் கடும் சரிவை சந்திக்க தொடங்கியது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை கௌதம் அதானி தலைமையிலான குழு மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. 


ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் அதானி குறித்து வெளியிட்ட அறிக்கையில், “அதானி நிறுவனத்தில் சொந்தங்களுக்கு மட்டுமே முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன. வரி முறைகேடு, செயற்கையான முயற்சியால் தனது பங்குகளில் விலையை ஏற்றுதல், வங்கிகளில் அதிக கடன் என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது என தெரிவித்தது. 


இந்தநிலையில், அதானி நிறுவனத்தை தொடர்ந்து மற்றொரு நிறுவனம் தொடர்பாக ஹிண்டர்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட போகிறதா? அல்லது அதானி நிறுவனம்தான் மீண்டும் குறிவைக்கப்படுகிறதா என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.