கர்நாடகாவில் நடைபெற்ற ஹிஜாப் போராட்டம் குறித்து அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் சவாஹிரி திடீரென வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அல் சவாஹிரியின் இந்த வீடியோவிற்கு பின் என்ன நடந்தது என்ற உளவு தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. மாண்டியாவில் உள்ள அரசு பியு கல்லூரியில் படிக்கும் பிபி முஸ்கான் கான் கல்லூரிக்கு சென்ற போது இந்துத்துவா மாணவர்கள் மூலம் சுற்றி வளைக்கப்பட்டார். இந்துத்துவா மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் சென்று கோஷம் எழுப்ப தனியாளாக இந்துத்துவா மாணவர்களை நோக்கி பிபி முஸ்கான் கான் அல்லாஹு அக்பர் என்று கோஷம் எழுப்பினார். இந்த வீடியோ தேசிய அளவில் வைரலாகி உள்ளது. கையை தூக்கி துணிச்சலாக பிபி முஸ்கான் கான் கோஷம் எழுப்பியது ஹிஜாப் போராட்டத்தின் அடையாளமாக, சின்னமாக உருவெடுத்தது. இந்த நிலையில் முஸ்கானை பாராட்டி அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் சவாஹிரி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். நேற்று முதல்நாள் இவர் வெளியிட்ட 9 நிமிட வீடியோவில் முஸ்கானை பாராட்டி இருந்தார்.
அவர் பேசுகையில், "இந்துத்துவா கும்பலை முஸ்கான் தைரியமாக எதிர்கொண்டு இருக்கிறார். ஜிஹாத்தின் ஆற்றல் அவரிடம் இருந்தது. அவர் எங்கள் மதத்திற்கான, விடுதலைக்கான கோஷத்தை எழுப்பி உள்ளார். இஸ்லாமிய மக்களை முஸ்கான் தட்டி எழுப்பி இருக்கிறார். முஸ்கான் ஒரு புனிதமான பெண். எங்கள் சகோதரி மிக முக்கியமான உயரத்தை அடைந்துவிட்டார், அல்லா அவருக்கான பரிசை வழங்குவார். இந்து இந்தியாவின் நிலையை அவர் வெளிப்படுத்தி உள்ளார். அந்த நாட்டின் மோசமான நிலையை அவர் வெளிப்படுத்தி உள்ளார். இந்திய இஸ்லாமியர்கள் அங்கு தொடர்ந்து பதிலடி கொடுக்க வேண்டும். மீடியா மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் அரசுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அவர் எங்களை கவர்ந்துவிட்டார். அவரை பாராட்டி நான் கவிதை கூட எழுதி இருக்கிறேன். நான் கொடுக்கும் இந்த கவிதையை பரிசாக நினைத்து முஸ்கான் சகோதரி அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்", என்று கூறி அய்மன் அல் சவாஹிரி வீடியோவில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அல்கொய்தா தலைவர் இப்படி திடீரென பேசியதற்கு காரணம், இந்தியாவில் அல்கொய்தா அமைப்பிற்கான ஆதரவை பெற அவர் முயற்சிப்பதே என்று உளவு அமைப்பு தகவல்கள் தெரிவித்ததாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதோடு முன்பெல்லாம் அல்கொய்தா அமைப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேசும். இப்போது இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆதரவை பெற விரும்பி அவர்கள் குறிப்பிட்ட விஷயங்களை மையப்படுத்தி பேசுகிறார்கள். அப்படித்தான் இதில் ஹிஜாப் விஷயம் பற்றி பேசி இருக்கிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது அல்கொய்தா அமைப்பின் தலைவர் பல காலங்களுக்கு பிறகு வெளியிட்ட வீடியோ. அல்கொய்தா அமைப்பு மூலமும் நீண்ட காலத்திற்கு பின் வெளியிடப்பட்ட வீடியோ இது . அல்கொய்தா தலைவரான இவர் பலியாகிவிட்டார் என்று கருதப்பட்ட நிலையில்தான் அந்த வீடியோ வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரிலும் நடக்கும் சில ஹிஜாப் போராட்டங்களுக்கு பின் தீவிரவாத அமைப்புகள் இருக்கலாம் என்று சிலர் ஹிஜாப் போராட்டத்த்தை திசை திருப்ப முயற்சிப்பதால் முஸ்கானின் தந்தை அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஹிஜாப் விவகாரத்தில் திடீரென அய்மன் அல் சவாஹிரி இப்படி பேசியது பெரிய சர்ச்சையானது. தேவையின்றி முஸ்கானை அவர் பாராட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் முஸ்கானின் தந்தை முகமது ஹுசைன் கான் அல்கொய்தா அமைப்பின் தலைவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "அல்கொய்தா அமைப்பின் தலைவர் இப்படி பேசியது தவறு. அவர் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வீடியோ பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அவர் யார் என்று கூட எங்களுக்கு தெரியாது. செய்தி பார்த்துதான் தெரிந்து கொண்டோம். அவர் அரபியில் பேசியது கூட புரியவில்லை. நாங்கள் இந்தியாவில் நிம்மதியாக இருக்கிறோம். நாங்கள் சந்தோசமாக அன்புடன். எங்கள் சகோதரர்களுடன் வசித்து வருகிறோம். மக்கள் ஏதாவது சொல்வார்கள். யாராவது பிரச்சனை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். நாங்கள் எங்கள் நாட்டில் அமைதியாக வசிக்கிறோம். அவர் எங்களை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. எங்களுக்கும் இந்து சகோதரர்களுக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்த அவர் முயன்று கொண்டு இருக்கிறார்", என்று முஸ்கானின் தந்தை பதிலடி கொடுத்துள்ளார்.