இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து 14 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்கள் அனைவரையும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைத்து ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது. ஆனாலும், தமிழர்கள் இன பிரச்னை மட்டும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.


பயங்கரவாத எதிர்ப்பு மசோதா:


இந்நிலையில், இலங்கை அரசு கொண்டு வந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு மசோதா மீண்டும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, தமிழர்களை குறிவைத்து இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே, இந்த பிரச்னையை கையில் எடுத்துள்ளது தமிழர்கள் நலனுக்காக குரல் கொடுத்து வரும் தமிழ் தேசிய கூட்டணி.


வடகிழக்கு மாகாணங்களில் இன்று போராட்டம் வெடித்தது. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு (PTA), 1979, பதிலாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கூட்டணி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. 


புதிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை மார்ச் மாதத்தின் மத்தியில் இலங்கை அரசு அரசிதழில் வெளியிட்டது. ​​நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்கு என தனி நாட்டை உருவாக்குவதற்காக 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் ஆயுதப் போரில் ஈடுபட்ட போது, அவர்களுக்கு எதிராக அரசாங்கப் படையினரால் PTA சட்டம் பயன்படுத்தப்பட்டது. 


நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யாமலேயே குற்றம்சாட்டப்பட்டவர்களை பல ஆண்டுகளாக தன்னிச்சையாக காவலில் வைக்க அனுமதிக்கும் PTA சட்ட விதிகளை சர்வதேச மனித உரிமைக் அமைப்புகளும் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் அரசியல் கட்சிகளும் கடுமையாக சாடியுள்ளன.


விடுதலை புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி வழக்கு பதிவு செய்யாமலேயே 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை சிறையில் அடைத்து வைத்த சம்பவம் எல்லாம் இலங்கையில் நடந்தது.


போராட்ட களமாக மாறிய வடகிழக்கு மாகாணங்கள்:


PTA சட்டத்தை ரத்து செய்ய ஐரோப்பிய ஒன்றியம்(EU)  அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம் தந்து வந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல், ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்து, சர்வதேச தரத்திற்கு ஏற்ப புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.


இந்த சூழ்நிலையில்தான், புதிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை இலங்கை அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், தற்போது இதற்கு எதிராகவும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


கடந்த 1979ஆம் ஆண்டு, தமிழ் போராளி குழுக்களை அடக்குவதற்கு இடைக்கால ஏற்பாடாக கொண்டு வரப்பட்டதுதான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய மசோதா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன, "புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படும்" என்றார்.


யாழ்ப்பாணத்தின் வடக்கில் தென்மராட்சி, கொடிகாமம், சாவகச்சேரி ஆகிய மூன்று பகுதிகளிலும் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.