நேபாளத்தில் காணாமல் போன ஹெலிகாப்டரில் சென்ற 6 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரம் அருகே சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. 


நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே லாம்ஜுரா என்ற இடத்தில் 5 வெளிநாட்டினர் உட்பட 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் இன்று காலை 10:15 மணியளவில் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு நோக்கி பயணித்த போது கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பில் இருந்து வெளியேறியது. 


உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் வர்த்தக ஹெலிகாப்டர், காத்மாண்டுவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 


மானாங் ஏர் 9N-AMV என்று அழைக்கப்படும் ஹெலிகாப்டர் இன்று காலை கேப்டன் சேட் குருங்காலுடன் 5 வெளிநாட்டு பயணிகளுடன் பயணிக்க தொடங்கியது. சரியாக சொலுகும்புவில் உள்ள சுர்கியில் இருந்து புறப்பட்டு, 15 நிமிடங்களில் ஹெலிகாப்டர் தனது தொடர்பை இழந்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் காணாமல் போனதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட நிலையில், பகன்ஜே கிராமத்தின் லம்ஜுராவில் உள்ள சிஹந்தண்டா என்ற இடத்தில் ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 


முதற்கட்ட விசாரணையில், வானிலையின் மாற்றமே விபத்து காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.