ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஈரான் அரசு ஊடகம் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஈரானின் கிழக்கில் அமைந்துள்ள அஜர்பைஜான் நாட்டில் இப்ராஹிம் ரைசி பயணம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.


விபத்து நடந்தது எப்படி? ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வடமேற்கே 600 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஜோல்ஃபா நகரில் இந்த விபத்து நடந்ததாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 


ஹெலிகாப்டரில் அதிபர் ரைசியுடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹைனும் பயணம் செய்திருக்கிறார். இந்த சம்பவத்தை விவரிக்கும்போது, உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் "விபத்து" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.


ஆனால், சம்பவ இடத்திற்கு அந்த அதிகாரி இன்னும் சென்ற அடையவில்லை. இந்த சம்பவத்தில் ரைசி அல்லது பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதா என்பது இன்னும் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு செல்ல மீட்புப் படையினர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகள் தடைபட்டிருக்கின்றன.


அதிபரின் நிலை என்ன: சம்பவ இடத்தில் கடுமையான மழை பெய்ததாகவும் பலத்த காற்றுடன் மூடுபனி வீசியதாகவும் கூறப்படுகிறது. ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


அதே சமயத்தில், ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க முடியாமல் மீட்பு படையினர் திணறி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இந்த தகவல்கள் எதையும் உறுதி செய்ய முடியவில்லை. 


அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவுடன் இணைந்து அணை ஒன்றை திறப்பதற்காக இப்ராஹிம் ரைசி அங்கு சென்றுள்ளார். அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய மூன்றாவது அணை இதுவாகும். இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் அதிபர் ரைசியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.


கடந்தாண்டுதான், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், இஸ்ரேலுடன் இணக்கமான உறவையே அஜர்பைஜான் பேணி வருகிறது.


 






சமீபத்தில்தான், ஈரானும் இஸ்ரேலும் மாறி மாறி ஏவுகணைகளை ஏவி தாக்கி கொண்டன.