உலகப் புன்னகை தினம் அக்டோபர் மாதம் முழுவதும் உலகளாவிய ரீதியில் மக்களால் கொண்டாடப்படுகிறது. அதிலும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த நாளை கொண்டாடுகின்றனர்.வெளிநாடுகளில் பல்வேறு குழுக்கள் , அமைப்புகள் இணைந்து ,கலை நிகழ்ச்சிகளுடன் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடி இந்த புன்னகை தினத்தை கொண்டாடுகின்றனர்.


நாமும் சிரித்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே உலக  புன்னகை தினத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.அனைத்து எல்லைகளையும் கடந்து ஒரு உலகளாவிய மொழியாக பேசப்படுவது தான் இந்த புன்னகை.


வார்த்தைகள் அற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மொழி தான் இந்த புன்னகை. ஒரு மனிதனுக்கு உணர்ச்சிகளையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த ஆயிரக்கணக்கான வழிகள் இருந்தாலும் ஒரு புன்னகையால் அவற்றை எளிதாக சாதித்து விடலாம்.


உணர்வின் வெளிப்பாடாக பார்க்கப்படும் இந்த புன்னகை சிறந்த நோய் நிவாரணியாகவும் இருக்கிறது. ஒருவரிடம் தமது விருப்பத்தை தெரிவிக்கவும் , ஒரு கூட்டத்திற்கு இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் இந்த புன்னகை ஒன்றே போதுமானது


மனிதப் பிறவிக்கே உரித்தான இந்த மிகப்பெரும் கொடையான புன்னகையால் பல்வேறு பிரச்சனைகளுக்கு இலகுவில் தீர்வு காண முடியும்.மனித வாழ்வில் ஏற்ற இறக்கங்கள், இன்பதுன்பங்கள் இருக்கத்தான் செய்யும், அது இயற்கையானதாக இருந்தாலும், ஒரு புன்னகை கஷ்டங்கள் அனைத்தையும் மறக்கச் செய்து வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.


புன்னகையை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது என்னதான் பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு கண்டுவிட முடியும். அதேபோல் ஒரு குழப்பமான சூழ்நிலையில் இந்த புன்னகை அமைதியையும் அளிக்கவல்லது.உங்களை ஒரு நபர் மனசு நோகும்படி பேசிவிட்டாலோ, அல்லது எது ஏதாவது ஒரு காரணத்திற்காக மனம் நோகும்படி நடந்தாலோ. அந்த இடத்தில் சிறிய புன்னகையை உதிர்த்துவிட்டு கடந்து செல்லுங்கள் அந்த புன்னகை  சூழ்நிலையை மாற்றிவிடும் .


அதேபோல தான் உலக அளவில் இன்று மனிதர்களுக்கு தேவைப்படும் மருந்தாக இந்த புன்னகை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிகளவான மகிழ்ச்சி மற்றும் புன்னகையுடன் இருப்பவர்களின் ஆயுள் கூடும் என்பதையும் ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் .


ஆகவே இந்த நாகரீக , இயந்திர மயமான உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த புன்னகை உன்னதமான வாழ்வை வழங்கும். ஆகவே நாள்தோறும் இந்த மருந்து மாத்திரைகளை உட்கொள்வது போல் புன்னகையையும், ஒரு சில நிமிடங்கள் நாம் வெளிப்படுத்த தெரிந்திருந்தால் வாழ்க்கை இன்பமயமாகவே இருக்கும்.


உலக புன்னகை தினம் உருவான வரலாறு:


1963 இல்,மஞ்சள் ஸ்மைலி முகத்தை உருவாக்கியவர் தான் ஹார்வி பால். இவர் ஒரு வணிகக் கலைஞர், ஸ்டேட் மியூச்சுவல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவன பிரச்சாரத்திற்காக 1963 ஆம் ஆண்டில் ஸ்மைலி ஃபேஸ்   டிசைனை உருவாக்கினார். இந்த ஸ்மைலி ஃபேஸ் நேர்மறை ஆற்றலை தருவதுடன், நல்லெண்ணத்துடன் , மக்களை உற்சாகப்படுத்துவதை நோக்காகவும் கொண்டு பயன்படுத்தப்பட்டது.


இருந்த போதும் காலப்போக்கில்
ஸ்மைலி ஃபேஸின் உண்மையான அர்த்தத்தை அது வெளிப்படுத்தவில்லை எனவும் மக்களுக்கு அதை பற்றி புரியவில்லை எனவும் அதனை உருவாக்கிய ஹார்வி பால் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


இதனை அடுத்து இந்த ஸ்மைலி ஃபேஸின் உண்மையான அர்த்தத்தை உலகிற்கு வெளிப்படுத்துவதற்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் அடிப்படையில் தான் உலகப் புன்னகை தினத்தை அவர் உருவாக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் இந்த ஸ்மைலி ஃபேஸ் உலக மக்களிடம் பிரபலம் அடைய தொடங்கியது.


1. 1963 - ஹார்வி பால் புன்னகை ஈமோஜி முகத்தைக் கண்டுபிடித்தார்.


2. 1970ல் - ஸ்மைலி முகம் ,அரசியல் ரீதியாகவும், திரைப்படங்கள், கார்ட்டூன்கள் மற்றும் காமிக் புத்தகங்களிலும் பயன்படுத்தப்பட்டது.


3.1990ல் - ஸ்மைலி ஃபேஸ் பல்வேறு சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்து. தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.


4. 1999 - உலக புன்னகை தினம் நிறுவப்பட்டது.


உலகெங்கிலும் உள்ள மக்கள் உலக புன்னகை தினத்தை தனித்துவமான முறைகளில் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் உள்ள வொர்செஸ்டர் ஹிஸ்டோரிகல் சொசைட்டி, 2000 ஆம் ஆண்டு முதல் ஸ்மைலி ஃபேஸ் போன்ற பந்தை எறிந்து இந்த நாளைக் கொண்டாடி வருகிறது. 


அதேபோல் உலக புன்னகை தின செய்திகளை சுமந்து செல்லும் பலூன்களும் பறக்க விடப்படுகின்றன. அத்துடன் ஸ்மைலி ஃபேஸ் பலூன் போட்டிகளும் நடத்தப்படுகிறது. மேலும் பல கேளிக்கை, வினோத போட்டிகள் வெளிநாடுகளில் பிரபலம் அடைந்திருக்கின்றன. இந்த புன்னகை தினத்தில் பல நாடுகளில் அமைப்புகள், நிறுவனங்கள் இணைந்து    ஏழைகளுக்கு இலவச உணவை வழங்குகின்றன. அதேபோல் மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் உள்ள நோயாளிகள் மற்றும் முதியவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் வகையில்  பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.


வருடம் தோறும் குறித்த புன்னகை தினத்தில் , கருணை செயல்களுக்கும், புன்னகைக்கும் நாளாகவும் ஒரு நாளை மட்டும் ஒதுக்குமாறு ஹார்வி பால் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் பின்னர் 2001 இல் ஹார்வி பால் மறைவையடுத்து , அவரது பெயரை போற்றும் வகையில் ஹார்வி பால் வேர்ல்ட் ஸ்மைல் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டு , ஒவ்வொரு ஆண்டும் உலக புன்னகை தினம் கொண்டாடப்படுகிறது.
வருடம் தோறும் அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை உலக புன்னகை தினமாகக் கொண்டாடுவதாக அன்று அறிவிக்கப்பட்டது.


இவ்வாறு உருவான உலக புன்னகை தினம் இன்றுவரை இன, மத ,பேதம்,பாலினம் , புவியியல் இருப்பிடத்தைக் கடந்து  அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அன்பையும் பரப்புவதற்காக  கொண்டாடப்படுகின்றது. புன்னகை மனநிலையை புத்துணர்வு பெறச்செய்து, மன அழுத்தத்தை போக்கி உடலில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இந்த புன்னகை நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றை அதிகரிப்பதாக ஆய்வுகளில் தெரிய வருகிறது. வலியை போக்கும்  நிவாரணியாக இருக்கும் இந்த புன்னகை ஒரு மனிதனின், ஆயுட்காலத்தை அதிகரிக்கிறது. ஆகவே பல பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமைவது புன்னகை ஒன்று மட்டுமே. தீர்க்க முடியாத பிரச்சனைகளை கூட தீர்த்து வைக்கும் இந்த புன்னகையை எப்போதும் போற்றுவோம் ,கொண்டாடுவோம். வாழ்விலும் நாம் இந்த புன்னகையை தவறாது வெளிப்படுத்துவோம். நேற்றுதான் அனுசரிக்கப்பட்டது புன்னகை தினம்.