தனிச்சிறப்பான நாட்களை உலகுக்குச் சொல்லவும், தனிப்பெரும் மனிதர்களை அடையாளப்படுத்தி கவுரவப்படுத்தவும் டூடுல் போடும் கூகுள் இன்று தனது 23வது பிறந்தநாளுக்கு தனக்குத்தானே டூடுல் போட்டுக் கொண்டாடியுள்ளது.
கூகுளுக்கு இன்று வயசு 23. ஒரு பிரபலமான காமடி டிக் டாக் உண்டு. அதில் ஒரு நபர், இதுதான் கூகுள் இதுட்டு என்ன கேட்டாலும் கொடுக்கும் என்பார். உடனே இன்னொரு நபர், கூகுள் கால் கிலோ பக்கோடா வாங்கிட்டு வா என்பார். கூகுளின் வீச்சை காமெடியாக சொல்லும் டிக்டாக் இது. இந்த டிக்டாக் பெரும்வாரியான ரசிகர்களைப் பெற்றது. உண்மையில் கூகுள் பக்கோடா எல்லாம் வாங்கித்தராது என்றாலும் கூட மோடி சொன்ன பக்கோடா எகானாமிக்ஸ் தொடங்கி நம் வீட்டருகே எங்கே சுவையான பக்கோடோ கிடைக்கும் வரை தெளிவாகக் கூறும்.
கூகுள் பர்த்டே டூடுல்:
கூகுள் நிறுவனம் தனது பர்த்டே டூடுலில், அனைத்து வார்த்தைகளின் தலையிலும் ஒரு கேக் துண்டை வைத்துவிட்டு, L என்ற எழுத்தை மெழுகுவர்த்தியாக்கி, அதன் கீழே 23 என்ற எழுதப்பட்ட பெரிய கேக்கும் வைத்துள்ளது. இன்று நீங்கள் கூகுளை திறந்தவுடன் இந்த கேக் உங்களை அன்புடன் வரவேற்கும்.
தொழில்நுட்ப ரீதியாக கூகுள் 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதியன்று கண்டுபிடிக்கப்பட்டது. முதல் 7 ஆண்டுகளில் கூகுள் செப்டம்பர் 4ஆம் தேதியன்று தான் தனது பிறந்தநாளைக் கொண்டாடியது. இருப்பினும், ஒருமுறை செப்டம்பர் 27 ஆம் தேதியன்று கூகுள் தேடுபொறியின் பயன்பாடு சாதனை எண்ணைத் தொட்டது. அதன் பின்னர் செப்டம்பர் 27 ஆம் தேதியே ஆண்டுதோறும் கூகுள் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
கூகுள் டூடுலுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. 1998 ஆம் ஆண்டு தான் முதல் டூடுல் வெளியானது. கூகுள் தேடுபொறி அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்னரே முதல் டூடுல் வெளியாகிவிட்டது. முதல் டூடுல் அமெரிக்காவின் நெவாடா நகரத்தின் பிளாக் ராக் சிட்டியில் நடந்த பர்னிங் மேன் என்ற நிகழ்வை நினைவு கூர்வதாக இருந்தது.
கூகுளை லேரி பேஜும், செர்கேய் ப்ரின் என்பவரும் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கினர். இன்று உலகிலேயே கூகுள் தான் மிகப்பெரிய தோடுபொறி இயந்திரமாக இருக்கிறது. அதன் சிஇஓவாக அதாவது தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியாவின் அதுவும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை இருக்கிறார் என்பது பெருமைக்குரியது. இவர் கடந்த அக்டோபர் 24, 2015 முதல் கூகுள் சிஇஓவாக இருக்கிறார். பின்னர் 2019 டிசம்பர் 3 ஆம் தேதி இவர் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் இன்க்கின் சிஇஓவாகவும் பதவி உயர்வு செய்யப்பட்டார். ஆல்ஃபபெட் இன்க் 2015 அக்டோபர் 2ல் தொடங்கப்பட்டது. பின்னர் இது கூகுளின் தாய் நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டது.