ஹாங்காங்கில் வியாழன் இரவு Cantopop இசைக்குழு ,மிரர் என்ற இசை நடன நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த போது, கீழே விழுந்த மெகா எல்இடி வீடியோ திரை, மேடையில் இருந்த இரண்டு நடனக் கலைஞர்களை தாக்கி காயப்படுத்தியது.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோ கிளிப்புகள் , மிரர் உறுப்பினர்களான அன்சன் லோ மற்றும் எடன் லூய் ஆகியோர் தங்கள் நடனக் கலைஞர்களுடன் நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களுக்கு மேலே கட்டப்பட்டிருந்த மெகா சைஸ் எல்இடி திரை, கீழ் நோக்கி விழுந்தது. இதில் அன்சன் லோ மற்றும் எடன் லூய் தலையில் நேராக அந்த திரை விழுந்ததும், பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை கண்ட பார்வையாளர்கள் அனைவரும் திகிலுடன் அலறினர். அந்த வீடியோவில் ஒரு நடனக் கலைஞரின் தலை மற்றும் உடலில் நேரடியாகத் தாக்கியது போல் தெரிந்தாலும், மேலும் மேடையில் இருந்த மற்ற கலைஞர்கள் மீதும் அந்த திரை விழுந்தது. உடனே நடனமாடிக் கொண்டிருந்த சக ஆட்டக்காரர்கள், அவர்களுக்கு உதவ முயற்சித்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் உடனே குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். தீவிர சிகிச்சைக்குப் பின் இரண்டு ஆண் நடனக் கலைஞர்களும் சுயநினைவுடன் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அதே நேரத்தில் நடனக் கலைஞர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மற்றவர் நிலையாக இருப்பதாகவும் மருத்துவமனை கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அது மட்டுமன்றி, இந்த விபத்தால் மூன்று பார்வையாளர்களும் காயம் அடைந்தனர். அவர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், மேலும் இருவர் அதிர்ச்சி நிலையில் இருந்தனர், ஆனால் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவையில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை பார்த்ததால் அவர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஹாங்காங் கொலிசியத்தில் மிரரின் 12 திட்டமிடப்பட்ட கச்சேரிகளில் இது நான்காவது நிகழ்ச்சியாகும். நடந்த இந்த சோக சம்பவத்திற்குப் பிறகு கச்சேரி உடனே நிறுத்தப்பட்டது. மிரர் கச்சேரிகளின் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த ஆன்லைன் மூலமாக ஆயிரக்கணக்கானோரிடம் கையொப்பங்களைப் பெற்று மெயில் மூலம் புகார் அனுப்பப்பட்டுள்ளது. மிரர் மற்றும் அதன் நடனக் கலைஞர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், தேவையற்ற மேடை பொறிமுறைகள் அல்லது உயர்த்தப்பட்ட மேடைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இந்த மனு மூலம் ஏற்பாட்டாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மிரரை உருவாக்கி நிர்வகிக்கும் நிறுவனமான Viu, இந்த கருத்துக்கான மின்னஞ்சல் கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை. 12 உறுப்பினர்களைக் கொண்ட இசைக்குழு ஹாங்காங்கில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.