குழந்தை திருமணத்திற்கு எதிராக பல உலக நாடுகள் கடுமையான சட்டங்களை இயற்றிய பிறகும், பல நாடுகளில் அந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. உலகில் 5இல் ஒரு சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது.


தொடர்ந்து வரும் குழந்தை திருமணங்கள்:


இதை தடுக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கை எடுத்த பிறகு கடந்த சில ஆண்டுகளாக சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், தற்போது பல்வேறு காரணிகளால் அது தடைப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் மோதல்கள், காலநிலை மாற்றம், கொரோனாவால் ஏற்பட்ட தாக்கம் ஆகியவை குழந்தை திருமணத்தை தடுத்து ஏற்படுத்திய முன்னேற்றத்தில் பின்னடைவை தந்துள்ளது.


இருப்பினும், 2030ஆம் ஆண்டுக்குள் குழந்தை திருமணத்தை முற்றிலுமாக ஒழிக்க ஐநா இலக்கு நிர்ணயித்துள்ளது.


இந்த நிலையில், ஆப்பிரிக்க நாடான கானாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 12 வயது சிறுமியை வயதான ஆன்மீக தலைவர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கானா நாட்டின் தலைநகரான அக்ராவில் நுங்குவா பகுதியை சேர்ந்தவர் நுமோ போர்கெட்டி லாவே சுரு XXXIII.


சிறுமியை மணந்த 63 வயது ஆன்மீக தலைவர்:


நுமோ பழங்குடி மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவராக உள்ளார். இவருக்கு வயது 63. அடையாளம் தெரியாத சிறுமி ஒருவரை இவர் கடந்த சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டார். கானாவில் சட்டப்பூர்வ திருமண வயது 18ஆகும். இதை மீறி இந்த திருமணம் நடந்துள்ளது.


திருமணம் நடைபெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. திருமணத்தின்போது, கணவருக்கு பிடித்தப்படி ஆடை அணியும்படி சில பெண்கள் அச்சிறுமியிடம் கூறுகின்றனர். அதுமட்டும் இன்றி, தாங்கள் பரிசாக கொடுத்த வாசனை திரவியங்களை கணவரை ஈர்க்கும் வகையில் பயன்படுத்தும்படி சிறுமிகளுக்கு சில பெண்கள் அறிவுரை வழங்கினர்.


இந்த திருமணத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருமணத்தை ரத்து செய்து ஆன்மீக தலைவரை விசாரிக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், திருமணத்திற்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


உள்ளூர் சமூக தலைவரான போர்டே கோஃபி ஃபிராங்க்வா II, இதுகுறித்து குறிப்பிடுகையில், "மக்கள் தங்கள் பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் புரிந்து கொள்வதில்லை. இது எங்கள் பாரம்பரியம். பழக்க வழக்கம்" என்றார்.


இருப்பினும், கானா போலிசார் சிறுமியை அடையாளம் கண்டு, மீட்டுள்ளனர். அவர் இப்போது அவரது தாயுடன் காவல்துறை பாதுகாப்பில் உள்ளார். சர்ச்சைக்குரிய திருமணம் குறித்து கானா அரசு இதுவரை எந்த பதிலும் வெளியிடவில்லை.