தலைவரை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே ஆயத்த ஆடை தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழக சட்டப்பபேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், நீங்கள் தங்கள் மகனுக்கு எம்.பி சீட் கேட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் தங்களை பார்க்க வந்தபோது 3 மணி நேரம் காக்க வைத்ததாக செய்தி வந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் 44 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். அனைவரும் போட்டி போட வேண்டும் என்ற நோக்கமில்லை. தலைவரை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற அடிப்படையில் செய்கின்றனர்.
சிட்டிங் எம்பிக்குதான் வாய்ப்பு
நான் சிட்டிங் எம்பிக்குதான் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் காங்கிரஸ் வசம் இருந்த 3 தொகுதிகள் திமுகவிற்கு வந்ததால் திமுகவின் 3 தொகுதியை காங்கிரஸ் எடுத்தது. அதில் ஒரு தொகுதி தான் திருநெல்வேலி. அதன் அடிப்படையில் தான் போனதே தவிர, இதில் யாரும் மன வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை, அதே போல எனது பையனுக்கு சீட் கேட்டதாக கூறினீர்கள். நான் என்ன அவ்வளவு விவரம் இல்லாதவனா? நான் சென்று தலைவரிடம் எம்பி சீட் கேட்பதற்கு.. அனைவரையும் போல அவனும் மனு தாக்கல் செய்திருக்கிறான். அவருக்கு சீனியாரிட்டி என்ன 6 மாதத்திற்கு முன்னால் மாணவரணி அமைப்பில் பொறுப்பில் உள்ளார்.
இந்த மாவட்டத்தில் எவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் எவ்வளவு காலம் சர்வீஸில் உள்ளவர்கள் உள்ளனர். அதை விடுத்து அப்பாவு மகனுக்கு கொடுக்க என்ன நியாயம் இருக்கிறது. அவர் இன்னும் கழகத்திற்கு அதிகம் பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த நிலையில் எனது மகனுக்கு எம்.பி சீட்டு கேட்டு தலைவருக்கு அழுத்தம் கொடுத்ததாக எழுதியுள்ளனர். திமுக தலைவர் தொகுதி பங்கீடு, தேர்தல் பணி, குறித்து பல்வேறு முடிவுகளை எடுக்கலாம். அதுபோன்று திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தன்னை சந்திக்க வந்த போது 3 மணிநேரம் காக்க வைத்தாக செய்தி வெளியிட்டு உள்ளனர். இது உண்மைக்கு புறம்பான செய்தி.
பிதாமகனே திமுக தலைவர் ஸ்டாலின்தான்
என்னை வேட்பாளர் வீட்டில் வந்து சந்தித்தார். என்னுடன் அமர்ந்து பேசிவிட்டுதான் சென்றார். யார் கொடுத்த அழுத்தம் காரணமாக இது போன்ற செய்தி அவதூறாக பரப்பபடுகிறது என்று எனக்கு தெரியவில்லை. இந்தியா கூட்டணி அமைவதற்கு பிதாமகனே திமுக தலைவர் ஸ்டாலின்தான். பிரதமருக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை அமைத்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த நிலையில் மஞ்சள் பத்திரிகை எழுதுவது போன்று தன்னை பற்றி அபத்தமாக எழுதியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் எனது மகன் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு முதல்வர் நெல்லைக்கு வந்த நாள் முதல் இன்று வரை தேர்தல் பணியாற்றி வருகிறார், கூட்டணிக்கட்சியினரும் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் கூறினார்.