கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பீர் இலவசம் என அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோபைடன்.
கொரோனாவால் உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா என்ற அடையாளத்திலிருந்து, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முதன்மை நாடு என்ற இலக்கை நோக்கி தேசத்தை இட்டுச்செல்ல முயன்று கொண்டிருக்கிறார் அதிபர் ஜோபைடன். அதனாலேயே, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்துவருகிறார்.
இதற்காக “month of action” என்ற திட்டத்தை அவர் அறிவித்திருக்கிறார். அதாவது அடுத்த மாதம் ஜூலை 3 அமெரிக்க சுதந்திர தினம். அன்றைய தினத்திற்கு முன்னதாகவே அமெரிக்காவில் 70% க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திவிட வேண்டும் என்ற இலக்கை அதிபர் நிர்ணயித்திருக்கிறார்.





ஜூலை மாதம் அமெரிக்காவில் கோடை விடுமுறை வேறு தொடங்கும் என்பதால், அதற்குள் பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள் என்றால் கொரோனா பரவல் சங்கிலியை உடைத்துவிடலாம் என்பதே அமெரிக்காவின் திட்டம். இதனை எட்ட அதிபர் பைடன் மக்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துவருகிறார். 
இது குறித்து அதிபர் ஜோபைடன் கூறியிருப்பதாவது:
எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமானோர் தடுப்பூசியை செலுத்திக் கொள்கின்றனரோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாக கொரோனாவுக்கு எதிராக நாம் வெற்றி பெறுவோம். அமெரிக்கர்கள் தடுப்பூசியை ஆர்வமாக செலுத்திக் கொண்டால், நாம் இந்தாண்டு சுதந்திரமான கோடையை எதிர்கொள்ளலாம், அது மகிழ்ச்சியளிக்கும் கோடையாக, நம்மை நமது உறவுகளுடன் இணைக்கும் கோடையாக, கொண்டாட்டங்கள் நிறைந்த கோடையாக அமைத்துக் கொடுக்கும். அதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். அச்சம் தவிருங்கள், இலவசமாக பீர் பருகுங்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இலவச பீர் அறிவித்திருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில் மது அருந்தும் பழக்கமில்லாதவர் அதிபர் ஜோபைடன் என்பது கூடுதல் சுவாரஸ்யத் தகவல். ஏற்கெனவே விளையாட்டுப் போட்டிகளுக்கு இலவச டிக்கெட் உள்ளிட்ட சலுகைகளும் தடுப்பூசி செலுத்துவோருக்கு வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதிபரின் இலவச பீர் அறிவிப்புக்கு வரவேற்பு கூடிவருகிறது. அதேநேரத்தில் விமர்சனங்களும் எழாமல் இல்லை.
இது குறித்து ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதாரத் துறை பேராசிரியரும், பால்டிமோர் மாகாண முன்னாள் சுகாதார ஆணையருமான டாக்டர் லீனா வென் கூறுகையில், "உயிர்காக்கும் ஒரு தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மக்களிடன் இரைந்து நிற்க வேண்டியிருப்பது வேதனையான விஷயம். உலகம் முழுவதும் மருத்துவ முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி கிடைக்காமல் உயிரிழக்கும் சூழலில், அமெரிக்கர்களை இப்படிக் கெஞ்ச வேண்டியிருப்பது வேதனை தருகிறது. இருப்பினும், இலவச அறிவிப்புகள் இந்த விவகாரத்தில் பலனளிக்கலாம்" என்றார்.




கமலா ஹாரிஸ் சுற்றுப்பயணம்..
இலவசங்கள் ஒருபுறம் இருக்க அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு மிகமிகக் குறைவாக இருக்கிறது. அதனால், துணை அதிபர் கமலா ஹாரிஸ், அதிபர் பைடனின் மனைவியும் முதல் குடிமகளுமான ஜில் பைடன் மற்றும் கேபினட் அமைச்சர்கள் தெற்கு மாகாணங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனர். அங்கே அவர்கள் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளவிருக்கின்றனர். பின்னர் மத்தியமேற்கு மாகாணங்களிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.




62.9% பேருக்கு தடுப்பூசி போட்டாச்சு..
அமெரிக்க மக்கள் தொகைய்யில் 62.9% பேர் இதுவரை ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை 33 கோடி. இதில், 13.39 கோடி மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 70% க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திவிட வேண்டும் என்ற இலக்கை அதிபர் ஜோபைடன் நிர்ணயித்திருக்கிறார்.