பாலஸ்தீனில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
தாக்குதல் :
பாலஸ்தீன் பகுதி காசாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. பாலஸ்தீன போராளிகள் குழுவின் தலைவரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 5 வயது சிறுமி உட்பட 6 குழந்தைகள் என மொத்தம் 24 பேர் பலியானதாக பாலஸ்தீனிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 204 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இஸ்ரேல் இதனை திட்டவட்டமாக மறுக்கிறது. பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் தாக்குதலில்தான் குழந்தைகள் இறந்ததாகவும் , இதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. முன்னதாக பாலஸ்தீனின் அல்-குத்ஸ் படைப்பிரிவு தளபதி அல்-ஜபரி பாலஸ்தீனில் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் அறிவித்திருந்தது.
தாக்குதலுக்கான காரணம் :
பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் போராளிகளுள் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இந்த கைதுக்கு பிறகு பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் போராட்ட குழுவிடம் இருந்து தங்களுக்கு அச்சுறுத்தல் வந்ததால்தான் இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்திருந்தார். மேலும் இஸ்லாமிய ஜிஹாத்துக்கு எதிரான வான்வழி மற்றும் பீரங்கிப் பிரச்சாரம் ஒரு வாரம் நீடிக்கும் என்று இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது, ஆனால் எகிப்தின் ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி, கெய்ரோ வன்முறையைத் தணிக்க இரு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பதற்றம் :
காசா எல்லையில் பல நாட்களாக பதற்றம் நிலவி வருவதைத் தொடர்ந்து மக்கள் அங்குள்ள பாதுகாப்பு முகாம்களில் குடியேறியுள்ளனர். இதற்கிடையில் பதற்றம் அதிகமாக இருப்பதால் இஸ்லாமிய ஜிஹாத்துக்கு எதிராக முன் எச்சரிக்கை நடவடிக்கையைத் தொடங்குவது அவசியம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.கடந்த மே 2021 இல் நடந்தது போல மீண்டும் ஒரு தாக்குதலுக்கு இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. கடந்த மார்ச் மாதம் ஜெருசலேமில் அல் அக்ஸா மசூதியில் பாலஸ்தீனர்களுக்கும் , இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு கண்ட நிலையில் தற்போது மீண்டும் அங்கு தாக்குதலை இஸ்ரேல் துவங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.