மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு ஹரியானாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் சளி மருந்தை உட் கொண்டது காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தது. இந்திய அரசு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.
சர்ச்சைக்குரிய இருமல் மருந்து:
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி, சர்ச்சைக்குரிய இருமல் மருந்து குறித்து இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு (DCGI) உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்ததாக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருந்தன.
இந்த இருமல் மருந்து ஹரியானாவின் சோனேபட்டில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிகல் லிமிடெட் மூலம் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மருந்துகளை காம்பியாவிற்கு மட்டுமே அந்நிறுவனம் ஏற்றுமதி செய்ததாகவும் அந்த மருந்தில் கலப்படம் நடந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தரம் இல்லாத இந்திய மருந்து:
மெய்டன் பார்மாசூட்டிகல் நிறுவனம், இந்த தவறை தொடர்ந்து செய்து வந்ததும் இந்த மருந்து நிறுவனத்தின் பல மருந்துகள், நான்கு மாநிலங்கள் நிர்ணயித்த தர நிலையில் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, 2011ஆம் ஆண்டே, வியட்நாம் நாடு இந்த நிறுவனத்தை தடை செய்திருக்கிறது.
இந்நிலையில், இது தொடர்பாக மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC), காம்பியா சுகாதார மையம் ஆகியவை மேற்கொண்ட கூட்டு விசாரணையில் குழந்தைகள் மரணத்திற்கும் இந்திய மருந்துக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து CDC வெளியிட்டுள்ள அறிக்கையில், "காம்பியாவில் இறக்குமதி செய்யப்பட்ட டைதிலீன் கிளைகோல் [DEG] அல்லது எத்திலீன் கிளைக்கால் [EG] ஆகியவற்றால் கலப்படம் செய்யப்பட்ட மருந்து குழந்தைகளிடையே இந்த கடுமையான சிறுநீரக பிரச்னைக்கு வழிவகுத்திருக்கலாம் என்று இந்த விசாரணை உறுதியாகக் கூறுகிறது.
டைதிலீன் கிளைகோல் காரணமாக நோயாளிகளிடையே மனநிலை பாதிப்பு, தலைவலி மற்றும் இரைப்பை குடல் ஆகிய அறிகுறிகள் தென்படும். இதனால் மற்றொரு சீரான அறிகுறியான சிறுநீரக பிரச்னையால் குறைந்த சிறுநீர் மட்டுமே வெளிவரும். 1-3 நாட்களில் சிறுநீரக செயலிழப்பு வரை இது செல்லக்கூடும்.
அதேசமயம், குறைந்த வளம் கொண்ட நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை கண்காணிக்கவும் சோதனை செய்யவும் மனித மற்றும் நிதி ஆதாரங்கள் இல்லாமல் இருக்கலாம்"
மத்திய அமைச்சர் விளக்கம்:
நோயை வகைப்படுத்துவதற்கும் சாத்தியமான காரண காரணிகளை கண்டறிவதற்கும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தை காம்பியா சுகாதார மையம் கடந்தாண்டு அணுகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் பிப்ரவரி 3 ஆம் தேதி மக்களவையில் அளித்த பதிலில், "சோதனைக்குப் பிறகு, இருமல் மருந்துகளின் மாதிரிகள் தரமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.