காமா பயில்வான் (Gama Pehalwan) மல்யுத்தத்தில் பெரும் புகழ்பெற்றவர். ‘தி கிரேட் காமா’ (The Great Gama) என்று அழைக்கப்பட்டவர். இன்று அவரது பிறந்தநாள் என்பதால், டூடுல் வெளியிட்டு அவருக்குப் பெருமையை கொண்டாடி இருக்கிறது கூகுள்.
ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக தங்கள் பங்களிப்பினை அளித்தவர்களின் முக்கிய நாளை கொண்டுவது கூகுளின் வழக்கம். அந்த வகையில் 20 ஆம் நூற்றாண்டில் மல்யுத்தத்தில் புகழ்பெற்ற வீரராக திகழ்ந்த குல்ஹாம் முகம்மது பக்ஷ் பட் (Ghulam Mohammad Baksh Butt) -இன் பிறந்த நாளான இன்று அவர் சாதனைகளை காண்போம்.
இந்த டூடுளை விருந்தா ஸவேரி என்பவர் வடிவமைத்திருக்கிறார்.
யார் இந்த காமா பயில்வான்?
சர்வதேச மல்யுத்த போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்தவரின் திறமையை உலகமே கண்டு வியந்தது. உலகிற்கே இந்தியாவின் பெருமையை பறைசாட்டியவர் இவர்.
காமா பயில்வான் என்று அன்புடன் அழைக்கப்படும் குலாம் முகமது பக்ஷ் பட் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தரஸ் மாவட்டத்தில் ஜபோவால் ( Jabbowal) கிராமத்தில் 1878 மே 22-ல் பிறந்தார். இவரது குடும்பத்தினர் மல்யுத்தத்தில் சிறந்து விளங்கியவர்களாக இருந்தனர். அந்த வழியில், காமா பயில்வான், தன் திறமையால் உலக அளவில் புகழ்மிக்க வீரராக உயர்ந்திருக்கிறார்.
இவர் தனது சிறு வயதிலேயே தினமும் 500 முறை பைடக் (பஸ்கி), 500 தண்டால் எனக் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். 1888-ல் நடைபெற்ற பஸ்கி போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்களை வென்று முதல் பரிசைத் தட்டி சென்றிருக்கிறார். இளம் வயதிலேயே போட்டிகளில் வெற்றி பெற்ற குலாம் முகமதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அன்றிலிருந்து தொடங்கியது இவருடைய வெற்றிப் பயணம்.
அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய மற்றொரு சம்பவம் என்னவென்றால், சுமார் 1,200 கிலோ எடையுள்ள பாறையைத் தூக்கி நிறுத்தியதுதான். அந்தப் பாறை, அவரின் புகழினை பெருமிததோடு நினைவு கூறும் வகையில் வடோதரா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
இவர் மல்யுத்தத்தில் உலக சாம்பியனாகத் திகழ்ந்த ரஹீம் பக்ஷ் சுல்தானிவாலா எனும் வீரர் ஏறத்தாழ ஏழடி உயரம் கொண்டவர். 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட காமா பயில்வான் அவருடன் நான்கு முறை மல்யுத்தத்தில் மோதியிருக்கிறார். மூன்று முறை போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. நான்காவது முறை காமா பயில்வான் வென்றிருக்கிறார்.
வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, காமா பயில்வானுக்கு வெள்ளியில் செய்யப்பட்ட தண்டாயுதத்தை அன்பளிப்பாக அளித்தார். தேசப் பிரிவினை காலத்தின்போது பாகிஸ்தான் நாட்டில் குடியேறிய அவர், தனது இறுதி நாட்களில் லாகூரில் வசித்தார். இவர் 1960-ல் மறைந்தார்.
இவர் 1910 மற்றும் 1927 ஆம் ஆண்டு உலக ஹெவி வெயிட் சாம்பியன் (World Heavyweight Championship ) பட்டம் வென்றவர் என்ற பெருமைக்குச் சொந்தகாரர் காம பயில்வான்.