நேபாளத்தில் Gen Z மாணவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் கேபி ஷர்மா ஒலி ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக, அந்நாட்டின் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நோபாளத்தில் செப்டம்பரில் வெடித்த Gen Z போராட்டங்கள்
நேபாளத்தில், கடந்த செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்தும், அரசின் ஊழல் மற்றும் பொருளாதார பிரச்னைகளை எதிர்த்தும் Gen Z மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் அந்நாட்டு நாடாளுமன்றம், நீதிமன்றம், அரசு அலுவலகங்களக்கு தீ வைத்தனர். இந்த கலவரத்தில் 76 பேர் கொல்லப்பட்டனர்.
கூண்டோடு ராஜினாமா செய்த அரசு
திடீரென வெடித்த மாணவர்கள் போராட்டத்தை சமாளிக்க முடியாமல், பிரதமர் பதவியில் இருந்து ஷர்மா ஒலியும், மற்ற அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, Gen Z தலைமுறையின் விருப்பப்படி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசிலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அடுத்தாண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வெடித்த Gen Z மாணவர்கள் போராட்டம்
இந்த சூழ்நிலையில், நேபாளத்தின் பாரா மாவட்டத்தின் சிம்பாரா பகுதியில், Gen Z மாணவர்கள் மற்றும் பேரணி நடத்திய ஷர்மா ஒலியின் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
அரசை எதிர்க்கும் பேரணியில் உரையாற்ற சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வருவதை எதிர்த்து Gen Z மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பிற்கும் ஏற்பட்ட இந்த மோதல், விமான நிலையம் வரையிலும் நீண்டது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கு மீண்டும் மோதல் ஏற்படாமல் இருப்பதற்காக, சிமாராவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் சுசிலா கார்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.