பிரான்ஸ் நாட்டில் மூதாட்டி ஒருவருக்கு போதைப்பொருள் அளித்து, 10க்கும் மேற்பட்ட நபர்களை விட்டு அவரது கணவரே 10 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தாண்டு, கொல்கத்தா மருத்துவர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மூதாட்டியை 50க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை:
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மனைவியை 10க்கும் மேற்பட்ட நபர்களை விட்டு 10 ஆண்டுகளாக அவரது கணவரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கந்தல் பொம்மை போன்று நடத்தியதாகவும் கெட்ட பழக்கத்திற்காக தன்னை தியாகம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட 72 வயது மூதாட்டி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தெற்கு பிரான்ஸில் உள்ள அவினான் நகரை சேர்ந்த கிசெல் பெலிகாட், தனக்கு நேர்ந்த கொடூரத்தை நீதிமன்றத்தில் விவரித்தார். "சுயநினைவு இன்றி இருக்கும்போது வரிசையில் நிற்க வைத்து பல ஆண்களை விட்டு எனது டொமினிக் பெலிகாட் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்தார்.
அவர்கள் என்னை ஒரு கந்தல் பொம்மை போலவும், குப்பை பை போலவும் நடத்தினார்கள். இனி எனக்கு ஒரு அடையாளம் இல்லை. நான் எப்போது என்னை மீண்டும் கட்டியெழுப்புவேன் என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, எல்லாம் சரிந்துவிட்டது. காட்டுமிராண்டித்தனமான பாலியல் வன்கொடுமை காட்சிகள் மட்டுமே நினைவில் உள்ளது.
நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம்: எச்.ஐ.வி இருப்பது தெரிந்தே ஒருவரால் ஆறு முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன். எனது உயிருக்கு ஆபத்து இருந்தது. ஆனால், ஒரு நொடி கூட யாரும் நிறுத்தவில்லை. ஆறு முறை என்னை பாலியல் வன்கொடுமை செய்ய வந்த ஒருவருக்கு செரோபாசிட்டிவ் இருந்ததால் எனக்கு எச்ஐவி பரிசோதனை செய்யப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், தெற்கு பிரான்சில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பெண்களை படம் பிடித்துக்கொண்டிருந்தபோது குற்றவாளி டொமினிக் பெலிகாட்டை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தனர். அவரது கணினியை சோதனை செய்த பிறகு, போலீஸ்-க்கு என்னை பற்றி தெரிய வந்தது. பின்னர், என்னை காப்பாற்றினார்கள்" என்றார்.
ஏறக்குறைய 10 ஆண்டுகளில் இது அவர்களின் வீட்டில் 100 முறைக்கு மேல் நடந்துள்ளது. மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை அவரது கணவர் படம்பிடித்து ஆயிரக்கணக்கான படங்களையும் வீடியோக்களையும் சேமித்து வைத்துள்ளார்.