பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வியாழக்கிழமை (டிசம்பர் 8) 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆணுறைகள் (காண்டம்) இலவசமாகக் கிடைக்கும் என்று கூறியுள்ளார். தேவையற்ற கர்பத்தையும், இளைஞர்கள் இடையே பாலியல் நோய்கள் பரவாமல் இருக்கவும் இந்த திட்டத்தை கொண்டு வருவதாக கூறினார்.
இலவச ஆணுறை
தேவையற்ற கர்ப்பம் மற்றும் பாலியல் பரவும் நோய்கள் (STDs) பரவுவதை குறைக்க பிரான்சில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேற்கு பிரான்சில் பாய்ட்டியர்ஸ்-இன் புறநகர் பகுதியான ஃபான்டைன் லே காம்டே (Fontaine-le-Comte) இல் இளைஞர்களுடன் சுகாதார விவாதத்தின் போது மக்ரோன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, "கருத்தடைக்கான ஒரு சிறிய புரட்சி" என்று அவர் கூறினார். 25 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களுக்கும் இலவச கருத்தடை வழங்கத் தொடங்கிய திட்டத்தைத் தொடர்ந்து, ஆணுறைகளை இலவசமாகக் கிடைக்கச் செய்யும் திட்டம் கொண்டுவரப்படும் என்றார்.
இளம்பெண்களுக்கான திட்டம்
இதைச் செய்வதன் மூலம், 18 வயதுக்குட்பட்டவர்களை இலக்காகக் கொண்ட ஒரு திட்டம் 25 வயது வரை விரிவுபடுத்தப்படுகிறது. இளம் பெண்கள் ஆணுறை வாங்க முடியவில்லை என்பதற்காகவெல்லாம் கர்பமாவதை ஏற்றுக்கொள்ள முடியாது, அதற்காகவே இந்த திட்டம் என்று கூறினார். பிரான்சில், ஆணுறைகள் மருத்துவர் பரிந்துரைத்தால் தேசிய சுகாதார அமைப்பால் கொடுக்கப்படுகின்றன.
பாலியல் கல்வி
ஒட்டுமொத்த பாலியல் கல்வி குறித்து பேசிய அவர், "பாலியல் கல்வி விஷயத்தில் நம் நாடு அந்த அளவுக்கு சிறந்ததாக இல்லை. உண்மை கோட்பாட்டிலிருந்து மிகவும் வேறுபட்டுள்ளது. நம் ஆசிரியர்கள் சிறந்த கல்வியை அளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்" என்று மக்ரோன் கூறினார். பாலியல் கல்வியின் அவசியம் குறித்து மக்ரோன் மாணவர்களிடையே ஆழமாக பேசினார். இலவச காண்டம் கொண்டு வரும் திட்டம் போல பாலியல் கல்விக்கும் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்றுப் பரவல்
இந்த மாநாட்டில் மக்ரோன் மாஸ்க் அணிந்திருந்தார், அவர் "சுகாதார அமைச்சக வழிகாட்டுதல்களை" பின்பற்றுவதாகக் கூறினார், விடுமுறைக்கு முன்னதாக கோவிட் தொற்றுக்களின் அதிகரிப்புக்கு அரசாங்கம் அதன் பதிலை கூற தயாராகி வருகிறது. ஆனால் இதுவரை மாஸ்க் அணியவேண்டும் என்ற உத்தரவுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படவில்லை. "நம் நாடு தொற்றுநோயின் புதிய பரவலை எதிர்கொள்கிறது... ஒரு முன்மாதிரியாக நான் மாஸ்க் அணிவது நல்லது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் ஒட்டுமொத்த ஆணைகளுக்காக நாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை," என்று அவர் கூறினார். நெரிசலான இடங்களில் முகமூடிகளை அணியுமாறும், குளிர்காலம் நெருங்கி வருவதால் கோவிட் தடுப்பூசி பூஸ்டர் டோஸ்களை பெறுமாறும் அதிகாரிகள் மக்களை வலியுறுத்துகின்றனர்.