France abortion: கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கும் மசோதாவிற்கு, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 780 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


கருக்கலைப்பு அரசியலமைப்பு உரிமை:


திங்கட்கிழமை நடைபெற்ற பிரான்சு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கும் மசோதாவை அதிபர் இமானுவேல் மேக்ரான் தாக்கல் செய்தார். இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் அவையில் இருந்த மொத்த உறுப்பினர்களில், 780 பேர் மசோதாவிற்கு ஆதரவாகவும், 72 பேர் எதிராகவும் வாக்களித்தனர். அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற கருக்கலைப்பு உரிமைகள் திரும்பப் பெறப்பட்டது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,  உலகில் கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கிய முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை ஆனது, பிரான்சின் பெருமை மற்றும் உலக நாடுகளுக்கான செய்தி என இமானுவேல் மேக்ரான் பெருமிதம் தெரிவித்துள்ளார்.






வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தம்:


பிரான்சில் கடந்த 1975ம் ஆண்டு முதல் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் தான் 1958ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்நாட்டின் அரசியலமைப்பில் உள்ள, பெண்கள் சுதந்திரம் தொடர்பான பிரிவை மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அதில், கருக்கலைப்பு மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்த நிலையில்,  நவீன பிரான்சின் அரசியலமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 25 வது திருத்தம் இதுவாகும். 2008ம் ஆண்டிற்குப் பிறகு அந்நாட்டு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் முதல் திருத்தம் இதுவாகும். இதனை கொண்டாடும் விதமாக பாரிஸில் உள்ள ஈஃபிள் டவரில் "மை பாடி மை சாய்ஸ்"  என்ற வாசகம் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டு கொண்டாடப்பட்டது.


சட்டம் சொல்வது என்ன?


பிரான்ஸ் இயற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, குறைந்தபட்சம் முதல் 14 வார கர்ப்பகாலத்தில் அரசு நிதியுதவியுடன் கருக்கலைப்புகளை அனுமதிக்கிறது. பெற்றோரின் அனுமதியின்றி சிறார்களும் இந்த அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இணையத்தில் கருக்கலைப்பு எதிர்ப்பு பேச்சு தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கு கருக்கலைப்பு பெண்களின் உரிமை என போராடும் ஒரு தரப்பினர் பேராதரவு தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், நாட்டில் கருக்கலைப்பு உரிமைக்கு பெரும் ஆதரவு இருப்பதால், அரசியல் லாபத்திற்காக மேக்ரான் இதை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என கத்தோலிக்க அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.