Youtube CEO Passed Away: யூடியூப் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த, சூசன் வோஜ்சிக்கி மறைவுக்கு சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
யூடியூப் முன்னாள் சிஇஒ மரணம்:
யூடியூப் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வோஜ்சிக்கியின் மரணம் குறித்த செய்தியை அவரது கணவர் டென்னிஸ் ட்ரோப்பர் சமூக ஊடக தளமான பேஸ்புக்கில் ஒரு பதிவு மூலம் பகிர்ந்துள்ளார். ஆகஸ்ட் 10, 2024 அன்று வெளியிட்டுள்ள பதிவில், வோஜ்சிக்கி புற்றுநோயால் இறந்துவிட்டதாக ட்ரோப்பர் பகிர்ந்துள்ளார். "சூசன் வோஜ்சிக்கி காலமான செய்தியை நான் ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணவர் வேதனை:
56 வயதான வோஜ்சிக்கி ட்ரோப்பரை 26 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் சிறிய உயிரணு அல்லாத நுரையீரல் புற்றுநோயுடன் 2 ஆண்டுகள் நீடித்த போருக்குப் பிறகு அவர் இறந்துவிட்டார் என்று அவரது கணவர் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “சூசன் எனது சிறந்த நண்பர் மற்றும் வாழ்க்கை துணை மட்டுமல்ல, ஒரு சிறந்த மனம், அன்பான தாய் மற்றும் பலருக்கு அன்பான தோழியாக இருந்தார். எங்கள் குடும்பம் மற்றும் உலகத்தில் அவரது தாக்கம் அளவிட முடியாதது. நாங்கள் மனம் உடைந்துள்ளோம், ஆனால் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் நாங்கள் செல்லும்போது தயவுசெய்து எங்கள் குடும்பத்தை உங்கள் எண்ணங்களில் வைத்திருங்கள்” என்று டென்னிஸ் ட்ரோப்பர் குறிப்பிட்டுள்ளார்.
சுந்தர் பிச்சை இரங்கல்:
வோஜ்சிக்கி குடும்பத்தினருக்கு ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், கூகுளின் வரலாற்றில் பலரைப் போலவே வோஜ்சிக்கி முக்கிய இடம் வகிக்கிறார். அவர் இல்லாத உலகத்தை கற்பனை செய்வது கடினம். அவர் ஒரு நம்பமுடியாத நபர், தலைவர் மற்றும் நண்பராக இருந்தார். உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவளை அறிந்துகொள்வதில் சிறந்து விளங்கும் எண்ணற்ற கூகுளர்களில் நானும் ஒருவன்” என சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.
ஆல்பபெட் குழுமத்தில் வோஜ்சிக்கி:
இன்று ஆல்பாபெட் குழுமமாக உருவெடுத்துள்ள கூகுள் நிறுவனத்தை கட்டமைப்பதில், முக்கியப் பங்காற்றியவர்களில் வோஜ்சிக்கி குறிப்பிடத்தக்கவர் ஆவார். கடந்த 1999ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் 16வது ஊழியராக வோஜ்சிக்கி இணைந்தார். தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவினார். உச்சபட்சமாக யூடியூப் பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக 9 ஆண்டுகள் பணியாற்றி வந்த வோஜ்சிக்கி, அதன் வளர்ச்சிக்கு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்தார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் அந்த பதவியில் இருந்து வெளியேறி புற்றுநோய்க்கான சிகிச்சையை பெற்று வந்தார். இந்நிலையில் சூசன் வோஜ்சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, இந்த ஆண்டின் தொடக்கத்தில், வோஜ்சிக்கியின் மூத்த மகன் மார்கோ ட்ரோப்பர், தனது19வது வயதில் போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் திடீரென உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.