அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரட்டனில் ஒரே ஆண்டில் மூன்று பிரதமர்கள் மாறினர். கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்து போது பார்ட்டி நடத்தியது உள்பட பல சர்ச்சைகளில் சிக்கியதால் போரில் ஜான்சன் கடந்தாண்டு செப்டம்பர் மாதம், பிரதமர் பதவியில் இருந்து விலகினார். 


பிரிட்டன் அரசியல் சூழல்:


இதை தொடர்ந்து, கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் பதவியேற்ற லிஸ் டிரஸ், 45 நாள்களிலேயே ராஜினாமா செய்தார்.
லிஸ் டிரஸை தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக், கடந்த ஓராண்டுக்கு மேலாக அந்த பதவியில் தொடர்ந்து வருகிறார். ஸ்திரத்தன்மை இல்லாத காரணத்தால் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அமைச்சர்கள் நீக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.


அதன் தொடர்ச்சியாக, பிரிட்டன் உள்துறை அமைச்சராக பதவி வகித்த தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட சுயெல்லா பிரேவர்மேன் நீக்கப்பட்டுள்ளார். அகதிகளுக்கு எதிராகவும் புலம்பெயர்ந்து வரும் மக்களுக்கு எதிராகவும் தொடர் சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வரும் சுயெல்லா, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டங்களை கடுமையாக விமர்சித்திருந்தார். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்டு வரும் பேரணியை வெறுப்பு பேரணி என குறிப்பிட்டிருந்தார்.


குறிப்பாக, லண்டனில் நடத்தப்பட்ட மாபெரும் போராட்டத்தை மாநகர காவல்துறை முறையாக கையாளவில்லை என சாடியிருந்தார். இதை தொடர்ந்து, சுயெல்லாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அழுத்தம் எழுந்தது. இச்சூழலில், சுயெல்லாவை நீக்கிவிட்டு வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஜேம்ஸ் கிளெவர்லியை உள்துறை அமைச்சராக நியமித்துள்ளார் பிரதமர் ரிஷி சுனக்.


அமைச்சரவையில் அதிரடி திருப்பங்கள்:


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகிப்பவர்கள், நாடாளுமன்ற இரு அவைகளில் ஏதேனும் ஒரு அவையில் உறுப்பினராக இருக்க வேண்டும்.


கடந்த 7 ஆண்டுகளாக, தீவிர அரசியலில் இருந்து டேவிட் கேமரூன் விலகியிருந்தாலும், தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டிருப்பது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. வடக்கு இங்கிலாந்தில் மிச்சமிருக்கும் அதி வேக ரயில் 2 திட்டத்தை ரிஷி சுனக் ரத்து செய்ததை டேவிட் கேமரூன் சமீபத்தில் விமர்சித்திருந்தார்.


கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையில், பிரிட்டன் பிரதமராக டேவிட் கேமரூன் பதவி வகித்த காலத்தில்தான், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என கடும் அழுத்தம் எழுந்தது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர வேண்டும் என டேவிட் கேமரூன் விரும்பினார். 


இறுதியில், பிரெக்சிட் வாக்கெடுப்பின்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என பெரும்பாலான மக்கள் வாக்களித்ததை தொடர்ந்து, பிரதமர் பதவியை டேவிட் கேமரூன் ராஜினாமா செய்தார். அதேபோல, சீன அரசாங்கத்துடன் அவர் நெருக்கமாக இருந்ததாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது.