கடந்த 1991ஆம் ஆண்டுக்கு பிறகு, அதாவது பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட பிந்தைய காலக்கட்டத்தில் இந்திய, மேற்குலக நாடுகளுக்கிடையேயான உறவு பெரிய அளவில் மாற்றம் கண்டது. குறிப்பாக, இந்திய - அமெரிக்கா, இந்தியா - பிரிட்டன் ஆகிய நாடுகளிக்கிடையேயான உறவில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது.
பி. வி. நரசிம்ம ராவ் தொடங்கி வாஜ்பாய், மன்மோகன் சிங், தற்போது மோடி வரையில், மேற்குலக நாடுகளுடனான உறவை வளர்ப்பதில் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
பிரிட்டன் சென்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்:
இப்படிப்பட்ட சூழலில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அரசுமுறை பயணமாக பிரட்டன் சென்றுள்ளார். லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவர், இந்தியாவில் கொண்டு வரப்பட்ட பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ், ஜன் தன் யோஜனா, ஆவாஸ் யோஜனா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் ஸ்கில் இந்தியா போன்ற திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "உலகம் மாறிவிட்டது, எங்கள் உறவு மாறிவிட்டது, இங்கிலாந்து மாறிவிட்டது, இந்தியா மாறிவிட்டது என்று சொல்லி என் உரையை ஆரம்புக்கிறேன். அப்படியென்றால், இந்தியாவில் என்ன மாறிவிட்டது என்று நீங்கள் என்னிடம் கேட்கலாம். உங்களுக்கு பதில் தெரியும். அதற்கு பதில் மோடி.
கடந்த பத்து ஆண்டுகளாக நீங்கள் அனைவரும் கேள்விப்பட்ட இந்த திட்டங்களில்தான் அதற்கு நீண்ட பதில் அடங்கி உள்ளது. பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) போன்ற திட்டங்களாக இருந்தாலும் சரி. பெண் குழந்தைகளுக்கான கழிப்பறைகள் கட்டுவது, ஜன்தன் யோஜனா, நிதி சேமிப்பு, வீடு கட்டுவது, ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்களாக இருந்தாலும் சரி.
"இந்தியாவில் நடந்த சமூகப் பொருளாதாரப் புரட்சி"
டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, திறன் இந்தியா போன்ற புள்ளிகளை இணைக்கும் போது தான், மக்கள் மீது ஏற்படுத்திய ஒட்டுமொத்த தாக்கத்தை பார்க்கலாம். இதுதான், இந்தியாவில் நடந்த மாற்றம்.
எனவே கடந்த பத்து வருடங்களை நாம் பார்க்கும் போது, அடுத்த ஆண்டுக்குள் அரசாங்கம் தனது இரண்டாவது பதவிக்காலத்தை நிறைவு செய்யும். இந்த பத்து வருடங்கள் உண்மையில் இந்தியாவில் ஒரு சமூகப் பொருளாதாரப் புரட்சியாக அமைந்துள்ளது. கடந்த 65 ஆண்டுகளில் நாட்டில் உருவாக்கியதற்கு இணையாக கடந்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட பல புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை கட்டியுள்ளோம்" என்றார்.
இந்திய - பிரிட்டன் உறவு குறித்து பேசிய ஜெய்சங்கர், "இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவை மறுவடிவமைக்க இன்று முயற்சித்து வருகிறோம். கடந்த பல ஆண்டுகளாக, நமது இரு நாடுகளும் ஒவ்வொன்றும் ஆழமாக மாறிவிட்டதால், நாங்கள் அவ்வாறு செய்ய முயற்சிக்கிறோம். நாம் நம்மில், நமது உறவுகளில், நமது தொடர்புகள் மற்றும் உலகத்துடனான அணுகுமுறைகளில் மாறிவிட்டோம். எனவே, ஒரு சமகாலத்திற்கு ஏற்ப நாம் ஒரு கூட்டணியை உருவாக்குவது முக்கியம். அதில் நம்பத்தகாத சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதைப் பார்க்க புதிய ஒருங்கிணைப்புகளை ஆராய வேண்டும்" என்றார்.