பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது கைது நடவடிக்கை தீவிரப்படுட்க்தப்பட்டுள்ளது. லாகூர் ஜமான் பூங்கா பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவரின் வீட்டிற்கு செல்லும் வழியிலும் காவல் துறையினர் குவிந்துள்ளனர். 


இம்ரான் கானை கைது செய்வதற்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் கடும் போராட்டத்தில் ஈட்டுபட்டு வருகின்றனர். வீட்டுக்கு வெளியே கலவரம் வெடித்துள்ளது.அவரை கைது கூடாதென ஆதாரவாளர்கள் காவல் துறையினரை தடுத்து வருகின்றனர். இந்நிலையில், அவர் வீட்டிற்கு வெளியே பரபரப்பான சூழல் நிலவுகிறது.


இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது, வெளிநாட்டு தலைவர்கள் வழங்கிய  விலை உயர்ந்த  பரிசு பொருட்களை பாதுகாக்கும் தோஷ்கானாவிடமிருந்து (Toshakhana) அவற்றை மலிவு விலையில்  விற்றதாக அவர் மீது குற்றச்சாடு எழுந்தது. இம்ரான் கான்  தேர்தல் ஆணையத்தில் அளித்த விளக்கத்தில், ‘‘கருவூலத்தில் இருந்த பரிசு பொருட்களை ரூ.2.15 கோடிக்கு வாங்கினேன். அவற்றை ரூ.5.8 கோடிக்கு விற்பனை செய்தேன்" என்று தெரிவித்திருந்தார்.


இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.   இந்த வழக்கில் இம்ரான் கான் ஒருமுறை கூட நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை. அதோடு மட்டுமல்லாமல்,  இஸ்லாமாபாத் நீதிமன்றத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியை மிரட்டியதாகவும் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இஸ்லாமாபாத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்களை பிறப்பித்திருந்தது.   தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களும் - காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் கல்வீச்சு, தடியடி போன்ற சம்பவங்களால் பலர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. இம்ரான் கான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது.


லாகூர் பரபரப்பு :


இதுவரை இம்ரான் கான் கைது செய்யப்படவில்லை. எந்நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை நீடிக்கிறது. ஹெலிகாப்டரில் அவரின் வீட்டிற்கு அருகே  இருக்கும் பகுதிக்கு போலீசார் சென்றுள்ளனர். அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 


பாகிஸ்தானில் என்ன நடக்கிறது? 


பாகிஸ்தானில் பல்வேறு நகரங்களில் இம்ரான் கான் ஆதாரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) அமைப்பினர் வீதிகளில் இறங்கி போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இம்ரான் கானை கைது செய்ய தங்களில் எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்தி வருகின்றனர். 


இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான மோதல் போக்கு நீடிப்பத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் வீட்டிற்கு முன்பு குவியும் ஆதாரவாளர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர காவல் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். காவல் துறையினர் இம்ரான் கானை கொலை செய்து விடுவார்களோ என்ற அச்சம் இருப்பதாக இம்ரான் கான் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில் இம்ரான் கான் தனது சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆதரவாளர்கள் தனது வீட்டிற்கு முன்பு வருமாறு அழைப்பு விடுத்தார். 


நான் கைது செய்யப்பட்ட பிறகு, தேசம் அமைதியாகி விடும் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணம் தவறு என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


 தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி பகிர்ந்துள்ள சில காணொளிகளில் இம்ரான் கானின் வீட்டின் அருகில் காவல்துறையினரின் கண்ணீர் புகை குண்டுகள் விழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளனர்.  இம்ரான் கைது விரைவில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், அங்கு பதற்க்கம் அதிகரித்துள்ளது.