நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி திருவிழாவில் பல அரசியல் பிரமுகர்கள் ஒன்று கூடிய நிகழ்வு பேசுபொருளாக மாறியுள்ளது. 


நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா கோலாகலமாக நிறைவடைந்துள்ளது. அக்டோபர் மாதம் என்றாலே நம் அனைவருக்கும் நவராத்திரி திருவிழா தான் நினைவுக்கு வரும். கொலு பொம்மைகள், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தசரா என அடுத்தடுத்த நிகழ்வுகளால் நவராத்திரி விழாவை அனைத்து தரப்பினரும் விமரிசையாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ரஜினிகாந்த் வீட்டில் கொண்டாடப்பட்ட நவராத்திரி விழா பேசு பொருளாக மாறியுள்ளது. 


ரஜினி கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் வசூலிலும் ரூ.600 கோடியை பெற்றது. இதனை தொடர்ந்து அவர் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரஜினி 170வது படத்தில் மிக தீவிரமாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக அவர் மும்பை சென்றுள்ளார். நீண்ட வருடங்களுக்கு பின் தொடர்ச்சியாக ரஜினி படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


இதனிடையே ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் அவரது வீட்டில் நவராத்திரி விழா களைக்கட்டும். அந்த வகையில் இந்தாண்டுக்கான ஏற்பாடுகளை லதா ரஜினிகாந்த் செய்திருந்தார். மேலும் ஏராளமான விவிஐபிகளுக்கும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி செல்வி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன், நடிகை மீனா,  ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சில திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். 


ரஜினி வீட்டில் அரசியலில் எதிரும், புதிருமாக இருப்பவர்கள் சந்தித்த நிலையில் எந்தவித பாகுபாடும் இன்றி அனைவரும் புகைப்படம் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. படப்பிடிப்புக்காக ரஜினி வெளிமாநிலம் சென்றுள்ளதால் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Laila Video: என் பிறந்தநாள் எப்போதும் ஸ்பெஷல்....தளபதி 68 அறிவிப்பு.. லைலா வெளியிட்ட மகிழ்ச்சி வீடியோ...