தொடக்க காலத்தில், அதாவது 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பிரபஞ்சம் எப்படி இருந்தது என்பது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட பிரபஞ்சத்தின் புகைப்படங்களிலேயே இதுதான் மிக தெளிவான ஒன்றாகும்.


உலகின் மிக சக்தி வாய்ந்த மற்றும் மிக பெரிய ஸ்பேஸ் டெலஸ்கோப்பான ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பில் எடுக்கப்பட்ட இந்த முதல் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் முதல்முறையாக வெளியிட்டுள்ளனர்.






டெலஸ்கோப்பிலிருந்து எடுக்கப்பட்ட முழு வண்ணப் படங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் தரவுகளை நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனடிய விண்வெளி நிறுவனம் நாளை வெளியிடவுள்ளது.


இந்த புகைப்படத்தில், ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்கள், இதுவரை பார்த்திராத மங்கலான சில பொருள்கள் பதிவாகி இருப்பதை காணலாம். அதுமட்டுமின்றி, தோராயமாக மணல் துகள் அளவுக்கு வானத்தின் ஒரு பகுதியையும் இந்த புகைப்படத்தில் பார்க்கலாம்.


இதை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இன்று ஒரு வரலாற்று நாள்...அமெரிக்கா மற்றும் அனைத்து மனித இனத்திற்கும் இது ஒரு வரலாற்று தருணம்" என தெரிவித்துள்ளார்.


இதுபற்றி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேசுகையில், "இது நம் அனைவருக்கும் மிகவும் உற்சாகமான தருணம். இன்று பிரபஞ்சத்திற்கு ஒரு அற்புதமான புதிய அத்தியாயம்" என்றார். 






ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் குறித்த கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இதுவரை எடுக்கப்படாத பிரபஞ்சத்தின் ஆரம்பகால ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்புப் படத்தைப் பாருங்கள். இவை அனைத்தும் வெப் தொலைநோக்கிக்கான ஒரே நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம். (உண்மையில், அதைப் படம்பிடிக்க ஒரு நாளுக்கும் குறைவாகவே ஆகும்!) இது பிரபஞ்சத்தை குறித்து புரிந்து கொள்ள தொடங்கும் வகையில் வெளியிடப்பட்ட வெப்பின் முதல் படம்" என பதிவிட்டுள்ளார்.


ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் இருந்து முதல் படத்தை வெளியிட்ட பிறகு பேசிய நாசா நிர்வாகி பில் நெல்சன், "நாங்கள் 13 பில்லியன் ஆண்டுகளுக்கும் முன்பாக எப்படி இருந்தது என்பதை திரும்பிப் பார்க்கிறோம். இந்த சிறிய புள்ளிகளில் ஒன்றில் நீங்கள் பார்க்கும் ஒளி 13 பில்லியன் ஆண்டுகளாக பயணிக்கிறது" என்றார்.


இதுகுறித்து நாசா, "வெளியிடப்பட்ட முதல் படங்கள் வெப்பின் அறிவியல் செயல்பாடுகளின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் குறிக்கிறது. இது நம் திட்டத்தின் முக்கிய அறிவியல் கருப்பொருள்களைத் தொடர்ந்து ஆராயும்" எனக் குறிப்பிட்டுள்ளது. ஆறு மாத காலச் செயல்முறைக்குப் பிறகு, வானியல் கண்டுபிடிப்பின் புரட்சிகர சகாப்தமாக இது பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண