ஈரானில் மெஹ்ரான் சமக் என்ற நபர் அமெரிக்கா கால்பந்து அணியின் வெற்றியை கொண்டாடும்போது, அந்நாட்டு ராணுவ படை சுட்டு கொன்றதாக செய்திகள் பரவி வருகிறது.
உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022 பரபரப்பான அடுத்த சுற்றை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தநிலையில், நேற்று நள்ளிரவில் அல் துமாமா ஸ்டேடியத்தில் நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் அணிகள் மோதின.
போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் கோல் போட கடும் போட்டி போட்டனர். இதனால் போட்டி தொடக்கத்திலேயே விறுவிறுப்பை பெற்றது. முதல் பாதி 38வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியப் புலிசிக் தனது அணிக்காக முதல் கோலை பதிவு செய்ய, அதுவே அமெரிக்க அணிக்கு முத்தான கோலாக அமைந்தது.
இராண்டாவது பாதியில் ஒரு கோல் அடித்து எப்படியாவது சமன் செய்ய ஈரான் வீரர்கள் போராடினர். இருப்பினும் ஈரான் வீரர்களில் முயற்சி அத்தனையும் வீணாய் போனது. இதன்படி, ஆட்டநேர முடிவில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈரான் அரசுக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் போராடி வருவது நம் அனைவரும் அறிந்ததே. அதன்படி, நேற்றைய போட்டி முடிவுக்கு பிறகு, ஈரான் நாட்டு மக்கள் ஈரான் தோல்வியை கொண்டாடியும், அமெரிக்க கொடியை கைகளில் ஏந்தியும் சாலைகளில் உலா வந்தனர். இது குறித்தான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைராலானது.
மேலும், ஈரானிய பத்திரிகையாளர் மசிஹ் அலினெஜாட் ஒரு வீடியோ கிளிப்பை தனது ட்விட்டர் பகிர்ந்து, ““ஈரானின் தெருக்களில் அமெரிக்கக் கொடியை அசைக்கிறார். 43 வருட ஆட்சி ஈரானியர்களை மூளைச்சலவை செய்து அமெரிக்காவை வெறுத்தது. ஆனால் ஈரான் முழுவதும் உள்ள மக்கள் இஸ்லாமிய குடியரசிற்கு எதிராக Us கால்பந்து அணியின் வெற்றியை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதைப் பாருங்கள். அமெரிக்கா, நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம் என்று மக்கள் கூச்சலிடுவது கேட்கிறது” என பதிவிட்டு இருந்தார்.
இந்த சூழலில், மெஹ்ரான் சமக் என்ற நபர் அமெரிக்கா கால்பந்து அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி நடனமாடியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த நபரை அந்நாட்டு ராணுவ படை சுட்டு கொன்றதாக செய்திகள் பரவி வருகிறது. இதுகுறித்து, ஈரான் மனித உரிமைகள் தனது ட்விட்டர் பக்கத்தில், “ 27 வயதுதான இவர் பெயர் மெஹ்ரான் சமக். நேற்றிரவு பண்டாரில் FIFAWorldCup2022 இல் இஸ்லாமியக் குடியரசின் தோல்வியைக் கொண்டாடுவதற்காக நாடு முழுவதும் உள்ள பலரைப் போல இவர் வெளியே சென்றார். அப்போது அரச படைகளால் அவர் தலையில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்” என பதிவிட்டு இருந்தது.