உலகில் மிகப்பெரிய ராணுவ பலம் கொண்ட நாடாக திகழ்வது அமெரிக்கா. அமெரிக்காவில் எந்தளவு ராணுவ மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதோ, அதே அளவிற்கு அந்த நாட்டிற்கு தீவிரவாத அச்சுறுத்தல்களும் இருந்து வருகிறது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களுக்கு அவ்வப்போது தீவிரவாத அமைப்புகள் போல சில விஷமிகளும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல்:
இந்த நிலையில், கடந்த 15-ந் தேதி அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க், பென்னிசுல்வேனியா, கன்னெக்டிகட், அரிசோனா மற்றும் அலாஸ்கா ஆகிய நகரங்களுக்கு மர்மநபரிடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, எஃப்.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தினர். அவர்களின் விசாரணையில் பெருவைச் சேர்ந்த இளைஞர் இந்த மிரட்டலுக்கு பின்னால் இருப்பதை கண்டுபிடித்தனர்.
பெரு நாட்டைச் சேர்ந்தவர் மானுவேல் நுனேஷ் சான்டோஸ். 33 வயதான இவர் ஒரு வலைதளங்களை உருவாக்கும் பணியை செய்து வருகிறார். இந்தியாவில் விளையாடும் பப்ஜி போன்று ஆன்லைனில் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆன்லைன் விளையாட்டில் தன் பெயர் லூகாஸ் என்றும், தன்னுடைய வயது 15 என்றும் கூறி மற்றவர்களிடம் பழகி வந்துள்ளார். இவருடன் பள்ளி மாணவிகள் பலரும் இணைந்து ஆன்லைனில் விளையாடி வந்துள்ளனர்.
காரணம் இதுதான்
அப்போது, ஆன்லைனில் தன்னுடன் விளையாடும் பள்ளி மாணவிகளிம் அவர்களது நிர்வாண படங்களை அனுப்புமாறு கேட்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். நிர்வாண படங்களை அனுப்ப மறுக்கும் மாணவிகளிடம் அவர்களது பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைப்பேன் என்றும் மிரட்டியுள்ளார். இவருடன் இணைந்து விளையாடிய சில மாணவிகளின் பள்ளிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது.
லூகாஸ் என்ற பெயரில் பள்ளி மாணவிகளை ஏமாற்ற முயற்சி மானுவேல் சுமார் 150 போலி வெடிகுண்டு மிரட்டல்களை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கு விடுத்திருப்பதும் எஃப்.பி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு பென்னிசுல்வேனியாவில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மாணவர்கள் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்படுவது உள்பட என பல நெருக்கடிகளுக்கும், தேவையற்ற பதற்றத்திற்கும் ஆளாகினர்.
தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கு 150 போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெரு நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஒசாமா பின்லேடன் நடத்திய இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவில் பன்மடங்கு பாதுகாப்பு எப்போதும் அமலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Pakistan Bomb Blast: பயங்கரம்.. பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு - 52 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
மேலும் படிக்க: Watch Video: பிறந்தநாள் பார்ட்டிக்குள் புகுந்த கரடி.. அரண்டுபோன மக்கள்..உற்சாகமாய் தின்ற கரடி.. இணையத்தில் வைரல்..