கொரோனா முதல் அலையை சமாளித்த நம்மால், இரண்டாவது அலையை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. போட்டி போட்டுக்கொண்டு உடலளவிலும், மனதளவிலும் சோர்வு அதிகமாகிக் கொண்டிருக்கின்றது.


“வேலைக்கு போகனும், குழந்தைக்கு ஃபீஸ் கட்டனும், வீட்டு செலவை சமாளிக்கணும், இப்ப இருக்க சூழல்ல கடனில்லாம இருந்துட்டா போதும், சேவிங்ஸ் பத்திலாம் அப்புறம் யோசிச்சுக்கலாம்” – இதுவே பெரும்பாலான அப்பாக்களின் மனநிலையாக இப்போது உள்ளது.



மகள்களுக்கும், மகன்களுக்கும் உலகின் முதல் ‘ஹீரோ’ அப்பாதான் என இன்று கொண்டாடி கொண்டிருக்கின்றோம். ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தடையின்றி வழங்கவும், கஷ்டமோ நஷ்டமோ, தொல்லையோ சிக்கலோ எல்லாவற்றையும் மறைத்து தனி ஆளாய் சமாளித்து வெறும் மகிழ்ச்சியை மட்டுமே எங்களிடம் கொண்டு சேர்க்கும் அப்பாவுக்கு இன்றைக்கு நான் தந்தையர் தின வாழ்த்துகளை சொல்லப்போவதில்லை. இன்றைக்கு அவரிடம் நான் சொல்லப்போவதேல்லாம் “We are in this together!”


ஆம். எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் அப்பா நமக்கு ஹீரோதான். ஆனால், ஹீரோவை தனி ஆளாய் தள்ளிவைத்து அவரை கொண்டாடுவது அவர் மேல் திணிக்கப்படும் ‘Responsibility’ ஆகவே நான் உணர்கிறேன்.


பொதுவாகவே, அப்பாக்கள் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், சிக்கல்களையும் அம்மாக்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை. ஒன்று, பகிர்ந்து கொண்டால் அம்மா பயந்துவிடுவார் என்பதற்காக இருக்கலாம். ஆனால், பெரும்பாலான இல்லங்களில் அம்மாக்களிடம் எதற்கு யோசனை கேட்பது, தான் செய்தவே சரி, தான் எடுப்பதுதான் இறுதி முடிவு என யார் பேச்சையும் கேட்காத அப்பாக்களே இங்கு அதிகம்.



அப்பா, நீங்கள் இந்த வழக்கமான வட்டத்திற்குள் இருந்து வெளிவர வேண்டுமென்பதே எங்கள் அனைவரது விருப்பம். நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை, குடும்பம் குறித்த உங்களது திட்டங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களிடம் இல்லையென்றாலும் குறைந்தது அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களை சூப்பர் ஹீரோவாக்கி உங்களது விருப்பங்களை தியாகம் செய்யச் சொல்வதில் எங்களுக்கு ஒரு போதும் உடன்பாடில்லை.


நீங்களும், உங்களுக்கு பிடித்ததை செய்ய, நிதானித்து வாழ, துன்பங்களை பகிர்ந்து கொள்ள, வாழ்க்கையை திட்டமிட நாங்கள் இருக்கின்றோம் என்பதை நினைவு கொள்ளுங்கள். அதை உறுதிப்படுத்தவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.


இதுவரையும், இனியும் நீங்கள் செய்யப்போகும் அன்புக்கு வெறும் நன்றி சொல்லி கடந்து செல்லாமல், உங்களுடன் சேர்ந்தே பயணிக்க விரும்புகிறோம். உங்களை சூப்பர் ஹீரோவாகா பார்க்காமல், இந்த வாழ்க்கையை யதார்த்தமாகவும், நம்பிக்கையுடனும் கடந்து செல்ல நான் அருகில் இருந்து கற்றுக்கொண்ட அனுபவ ஆசானாகவே உங்களை பார்க்கின்றேன். இத்தனை ஆயிரம் சிக்கல்களையும், பிரச்சனைகளையும் எப்படி சமாளித்தீர்கள் என ஆச்சரியமாக இருந்தாலும், உங்களோடு சேர்ந்து பயணித்து, அவற்றையெல்லாம் கற்றுக்கொள்ளவே ஆசை.


“ஆமாம்பா, இன்றைக்கு மட்டுமல்ல என்றுமே We are in this together. லவ் யூப்பா”