இந்தியாவில் பேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யப்படும் வெறுப்பு பிரச்சாரம் குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு நன்கு தெரியும் என்றும், அதனையொட்டி அந்த பதிவுகளுக்கு எதிராக குறைவான நடவடிக்கைகளையே அந்த நிறுவனம் எடுத்துள்ளதாகவும் ஃபேஸ்புக் முன்னாள் ஊழியர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 


மே 2021 வரை ஃபேஸ்புக் நிறுவனத்தில் டேட்டா சயிண்டிஸ்ட்டாக இருந்துள்ளார் ஹாகன். பின்னர் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளார். ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து வெளியேறும் முன்பு அங்கிருந்து ஆயிரத்துக்கும் அதிகமான ஆவணங்களின் தரவுகளை எடுத்துள்ளார். அதனையொட்டிதான் தற்போது இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பயத்தை உருவாக்கும் வகையில், ஆர்எஸ்எஸ்சை சார்ந்த நபர்களாலும், பக்கங்களாலும் குழுவினராலும் பகிரப்பட்டதற்கான ஆவணங்களையும் இவர் வெளியிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் சம்ப்ந்தப்பட்ட பதிவுகளுக்கு கிடைத்த வருமானத்திற்காகவும், அரசியல் காரணங்களுக்காகவும் ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 





இந்தியாவில் இஸ்லாமியர்களைக் குறிவைத்து எழுதப்பட்ட வெறுப்பு பதிவுகள் தொடர்பாக ஃபேஸ்புக் வைத்திருந்த இண்ட்ரெனல் ரெகார்ட்களையும் ஹாகன் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் மனிதநேயமற்ற பதிவுகள் பல இருந்ததாக கூறியுள்ளார். குறிப்பாக இஸ்லாமியர்களை பன்றிகளோடும், நாய்களோடும் ஒப்பிட்டு பதிவுகள் போடப்பட்டிருக்கின்றன. அதேபோல, தங்களுடைய குடும்பப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய குரானில் சொல்லப்பட்டிருப்பதாகவும் போன்ற பொய்யான தகவல்களும் பரப்பப்பட்டிருக்கின்றன. உள்ளூர் இந்திய மொழிகளில் இந்த வகையான வெறுப்பு பிரச்சார உள்ளடக்கத்தைக் கண்காணிக்க பேஸ்புக் நிறுவனத்திடம் தொழில்நுட்ப திறன் (Technical ability) இல்லாததையும் அந்த ஆவணம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக ஹிந்தி மற்றும் வங்காள மொழிகளில் பகிரப்பட்ட இஸ்லாமிய விரோத பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஹாகன் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் தனது வழக்கறிஞர்கள் மூலமாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் (Securities and Exchange Commission) 10 புகார்களை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து வெளியேறும் முன்பு அங்கிருந்து எடுத்த ஆயிரத்துக்கும் அதிகமான ஆவணங்களின் அடிப்படையில்தான் இந்த புகாரை பதிவுசெய்துள்ளார். 
அதில் குறைந்தது நான்கு புகார்களில் இந்தியா பற்றிய குறிப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது,
ஃபேஸ்புக்கால் இந்தியா டையர்-0  (Tier-0) கம்பெனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. டையர்-0 நாடு என்றால் தேர்தல் நேரங்களில் நிறுவனம் அதிக கவனத்தைக் காட்டும். பிரேசில் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் டையர் நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.




2019ம் ஆண்டிலேயே ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்ற நிறுவனங்கள் மனிதக் கடத்தல் மற்றும் உள்நாட்டு அடிமைத்தனம் (domestic servitude) போன்றவற்றிற்காக தங்களது தளம் பயன்படுத்தப்பட்டது பற்றி தெரிந்திருந்ததது என்றும் தெரிவித்துள்ளார். 


"குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், பிரிவினையைத் தூண்டவதாகவும் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாகவும் ஃபேஸ்புக்  உள்ளதாக அமெரிக்க காங்கிரசில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குறிப்பிட்டிருந்தார் ஹாகன். ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைக்கு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை எப்படி பாதுகாப்பாக இயக்குவது என்று தெரியும், ஆனால் தேவையான மாற்றங்களை செய்யமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தங்களது லாபத்தைதான் மக்கள் முன் வைக்கிறார்கள், ”என்று ஹவுகன் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.