நேபாளம் நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறை போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் பிரதமராக பலேந்திர ஷா பதவியேற்ற மறுநாளே இந்த சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. 

Continues below advertisement

கடந்த ஆண்டு செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் நேபாளம் நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜென்ஸி தலைமுறையினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 19 இளைஞர்கள் உட்பட 70 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக போராட்டத்தின் எழுச்சியை கட்டுப்படுத்த சமூக ஊடகங்களுக்கு குறுகிய கால தடை விதிக்கப்பட்டது. இதுமேலும் இளம் தலைமுறையினரை ஆத்திரமூட்டியது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடி காரணமாக நேபாள அரசு மீது அதிருப்தியில் இருந்த மக்களுக்கு இந்த சம்பவம் தூண்டுகோலாக அமைந்தது. நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது. அமைதியின்மை நாடு முழுவதும் பரவிய நிலையில் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. 

இந்த நிலையில் நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியான சுஷிலா கர்கி குறுகிய காலத்திற்கு நேபாள இடைக்கால அரசை நிர்வகித்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் ராப் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பலேந்திர ஷா எதிர்பாராத அளவில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஊழலுக்கு எதிரான போராட்டங்களின் போது நடந்த வன்முறையை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.  இப்படியான நிலையில் பலேந்திர ஷா தலைமையிலான அரசு நேற்று பதவியேற்றது. 

Continues below advertisement

இந்த குழுவின் விசாரணை அறிக்கை நேற்று நடந்த புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. இதில் சொல்லப்பட்ட பரிந்துரையையும் முடிவுகளையும் பலேந்திர ஷா உடனடியாக செயல்படுத்த முடிவு செய்தார். அதன்படி அந்த அறிக்கையில் இளைஞர்கள் எழுச்சியின் போது அலட்சியமாக இருந்த பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. 

மேலும் அந்த அறிக்கையில், “துப்பாக்கிச் சூட்டை நிறுத்தவோ கட்டுப்படுத்தவோ எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை . அரசின் அலட்சியமான நடத்தையின் காரணமாக சிறுவர்கள் கூட உயிரிழந்தனர்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை காத்மாண்டு பள்ளத்தாக்கு காவல்துறை நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை கைது செய்தனர். பக்தாபூர், குண்டுவில் உள்ள   இல்லத்தில்  ஷர்மா ஒலி கைது செய்யப்பட்டிருக்கிறார். முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக்கும் கைது நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். மேலும் சட்டப்படி நடவடிக்கை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

இது பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும், சட்டப்போராட்டம் தொடரும் எனவும்  கே.பி.ஷர்மா ஒலி தெரிவித்துள்ளார்.