தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதியார் உரிமைக் குரல் எழுப்பினார்.
ஆனால், உலகில் ஒவ்வொரு நிமிடமும் 11 பேர் பட்டினியால் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வறுமைக்கு எதிரான அமைப்பான ஆக்ஸ்ஃபாம் நடத்திய ஆய்வில், ஒவ்வொரு நிமிடமும் 11 பேர் பட்டினியால் உயிரிழக்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது. அதிர்ச்சி தரும் இந்த அறிக்கைக்கு ஆக்ஸ்ஃபாம், 'பல்கிப் பெருகும் பட்டினி வைரஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று உலகில் கோடிக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். வேலையிழப்பு பட்டினியை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆக்ஸ்ஃபாம் வெளியிட்டுள்ள அறிக்கை கவலையளிப்பதாக உள்ளது. அந்த அறிக்கையின் விவரம் வருமாறு,
பட்டினி வைரஸ் பல்கிப் பெருகிவருகிறது. இதனால் உலகின் பல இடங்களில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால், நிமிடத்துக்கு 11 பேர் இறக்கின்றனர். உணவுப் பஞ்சத்தால் மட்டும் உலக அளவில் நிமிடத்துக்கு 11 பேர் உயிரைவிடுகின்றனர். உலகம் முழுவதும் 155 மில்லியன் மக்கள் தற்போது உணவு பாதுகாப்பின்மை நிலவுகிறது. இது கடந்தாண்டை`விட 20 மில்லியன் அதிகமென்பது கவலையளிக்கும் விஷயம்.
இது குறித்து, ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் அமெரிக்காவின் தலைவர் அபே மேக்ஸ்மேன் கூறும்போது "கொரோனா பெருந்தொற்று ஒரு பக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்க, இன்னொருபுறம் இதில் சில நாடுகள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளன.
ஜூன் நடுப்பகுதியில் மட்டும் எத்தியோபியா, மடகாஸ்கர், தெற்கு சூடான், ஏமன் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் 521,814 பேர் பஞ்சத்தில் வாடுகின்றனர்.
கடந்த சில காலமாகவே உலகெங்கும் பட்டினியை ஏற்படுத்திவரும் முக்கியப் பிரச்சினைகளாக கொரோனா பெருந்தொற்று, காலநிலை பிரச்சினை மற்றும் உள்நாட்டுப் போர் ஆகியன இருக்கின்றன. உலக வெப்பமயமாக்கல், பெருந்தொற்றால் மோசமடைந்த பொருளாதாரம் ஆகியவற்றால், உலக அளவில் உணவுப் பொருட்கள் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு உலக அளவில் ஒரு கோடி மக்களைப் பட்டினியில் தள்ளியுள்ளது.
ஏமன், காங்கோ குடியரசு, ஆப்கானிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகளில் கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் உணவுப் பஞ்சம் அதிகரித்துள்ளது.
ஆனால், உலக நாடுகளோ கரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடாமல் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றன, உலக அளவில் ராணுவத்துக்குச் செலவிடும் தொகை 5,100 கோடி டாலர்களாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.38 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. உலக அளவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவி வரும் ஐ.நா. செலவிடும் தொகையில் இது ஆறு மடங்கு அதிகமானதாகும்" என்று தெரிவித்துள்ளது.
பட்டினியை ஒழிக்க உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் போரை நிறுத்த வேண்டும். போர் நடக்கும் பகுதியில் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஐ.நா.வின் பட்டினி போக்கும் முயற்சிக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.