கொரோனா காலத்தில் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு பில்லியனர்கள் உருவாகியுள்ளதாக ஆக்ஸ்ஃபார்ம் இண்டர்நேஷனல் தகவல்களை வெளியிட்டுள்ளது.


வேர்ல்ட் எக்கனாமிக் ஃபோரமின் வருடாந்திரக்கூட்டம் தாவோஸில் நடைபெற்று வருகிறது. பொது மற்றும் தனியார் கூட்டணிக்கான சர்வதேச நிறுவனமான இந்த வேர்ல்ட் எக்கனாமிக் ஃபோரம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டத்தை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் உலகம் முழுவதிலும் உள்ள பணக்காரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சமயத்தில் ‘வலியிலிருந்து லாபம் பெறுதல்’ என்ற தலைப்பில் ஆக்ஸ்ஃபார்ம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடந்த பத்து ஆண்டுகளைக்காட்டிலும் அதிவேகமாக வளர்ந்திருக்கிறது. உணவு மற்றும் எரிசக்தி துறையில் இருக்கும் பில்லியனர்கள் இரண்டு நாளுக்கு ஒரு பில்லியன் டாலர்களை சம்பாதித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.




கொரோனா கால கட்டத்தின் முதல் 24 மாதங்களில் பில்லியனர்களின் சொத்துகள் கடந்த 23 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த சொத்துமதிப்பைக் காட்டிலும் அதிகம் உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப்பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பானது, உலக ஜிடிபியில் 13.9 சதவீதமாக இருப்பதாகவும் 2000வது ஆண்டில் 4.4 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அது 3 மடங்கு அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.


மோசமான சூழ்நிலைகளிலும் குறைவான சம்பளத்திற்கு பணியாளர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். பெரும் செல்வந்தர்கள் பல தசாப்தங்களாக இந்த அமைப்பை முறைகேடாக மாற்றியதன்  பலன்களை இப்போது அறுவடை செய்து வருகின்றனர். தனியார்மயமாக்கல் மற்றும் மோனோபாலிகள் மூலமாக அதிர்ச்சியடையும் அளவிற்கான உலகின் சொத்துகளை பறிமுதல் செய்துள்ளனர். தொழிலாளர் உரிமைகள் மற்றும் விதிகளை நசுக்குவது உள்ளிட்ட அனைத்தையும் அரசாங்கங்களின் உடந்தையுடனேயே செய்துள்ளனர் என்று அந்த அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.




லட்சகணக்கானோர் உணவுக்கே வழி இல்லாமல் இருக்க்கிறார்கள் குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்கா முழுவதும் பட்டினியால் ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் இறந்துகொண்டிருக்கிறார். இந்த சமநிலையின்மை மனிதத்திற்கிடையே உள்ள பிணைப்பை உடைக்கிறது. உணவு, மருத்துவம் மற்றும் எரிசக்தித் துறை ஆகியவற்றில் மோனோபாலிகளாக இருப்பது ஆக்ஸ்ஃபாம் ஆய்வில் தெரியவந்துள்ளது.


ஆய்வறிக்கையின் படி 5 மிகப்பெரும் எரிசக்தி நிறுவனங்களான பிபி, ஷெல், டோட்டல் எனர்ஜீஸ், எக்ஸான், செவ்ரான் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒவ்வொரு நொடிக்கும் 2600 டாலர்களை லாபமாக சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், உணவுத்துறை சார்ந்து 62 புதிய பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். தி கார்கில் குடும்பம் மட்டும் உலக வேளாண்மை சந்தையில் 70 சதவீதத்தை கட்டுப்படுத்துகின்றன என்றும் அந்த குடும்பத்தில் மட்டும் 12 பில்லியனர்கள் இருக்கின்றனர் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது. முன்பு 8 பேர் மட்டும் பில்லியனர்களாக இருந்த நிலையில் கொரோனா காலத்திற்குப் பிறகு 4 புதிய பில்லியனர்கள் அக்குடும்பத்தில் உருவாகியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




உலகில் உள்ள 2668 பில்லியனர்களில் 573 பேர் 2020லிருந்து 12.7 ட்ரில்லியன் டாலர்களை வைத்திருப்பதாகவும், இது 3.78 ட்ரில்லியன் டாலர்கள் அதிகம் சொத்து சேர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையின் அடித்தட்டில் இருக்கும் 3.1 பில்லியன் மக்களிடம் இருக்கும் சொத்துகளைக்காட்டிலும் உலகின் முதல் பத்து பணக்காரர்களிடம் இருக்கும் சொத்து மதிப்பு அதிகம் என்ற தகவலையும் அந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.


 




உலகின் 20 பில்லியனர்களின் சொத்துமதிப்பு சப் சஹரன் ஆப்பிரிக்கா (Sub-Saharan Africa)வின் ஒட்டுமொத்த ஜிடிபிக்கு நிகரானது என்றும், மில்லியனர்களிடமிருந்து ஆண்டுதோரும் வசூலிக்கப்படும் 2 சதவீதம் சொத்துவரியும், பில்லியனர்களிடமிருந்து வசூலிக்கப்படும் 5 சதவீதம் சொத்துவரி மூலமாக  ஆண்டுக்கு 2.52 ட்ரில்லியன் டாலர்கள் வருவாய் கிடைக்கிறது அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வருவாயின் மூலம் 2.3 பில்லியன் மக்களின் வறுமையை போக்க முடியும் என்றும், உலகம் முழுவதற்குமான தடுப்பு மருந்துகளை தயாரிக்க முடியும் என்றும், சர்வதேச அளவிற்கான சுகாதார வசதியை அளிக்க முடியும் என்றும், அடித்தட்டு மற்றும் மத்தியத் தர மக்களின் சமூக பாதுகாப்பை வழங்க முடியும் என்றும் அந்த அறிக்கை விளக்கமளித்துள்ளது.