சஹாரா பாலைவனத்தில் உள்ள 1.2 சதவிகித நிலப்பகுதியை வைத்து உலகத்துக்கே மின்சாரம் வழங்க முடியும் என அணுசக்தி வல்லுநர் தெரிவித்துள்ளதாக போர்ப்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகத்துக்கே மின்சாரம்:
மெஹ்ரான் மொலேம் என்பவர், அணு பொருட்கள் மற்றும் அணு எரிபொருள் துறையில் நிபுணராகவும், பேராசிரியராகவும், டாக்டர் பட்டம் பெற்றவராகவும் உள்ளார். இவர், ஆப்பரிக்காவின் சகாரா பாலைவனத்தில் உள்ள வெறும் 1.2 சதவிகித நிலப்பகுதியில் சோலார் ஆற்றலை மட்டும் பயன்படுத்தி உலகத்திற்கே மின்சார ஆற்றலை வழங்க முடியும் என தெரிவித்துள்ளார். எப்படி ஆற்றலை வழங்க முடியும் என்பதற்கான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது,
உலகில் மொத்த ஆற்றல் பயன்பாடானது ( நிலக்கரி + எண்ணெய் (க.எண்ணெய் ) + நீர்மின்சக்தி + அணுசக்தி + புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ) ஆண்டுக்கு ( 2015 ஆம் ஆண்டை பொறுத்தவரை ) 17.3 டெராவாட் இருந்ததாக உலக எரிசக்தி வழங்கல் மற்றும் நுகர்வு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போது, பூமியின் 335 கிலோ மீட்டர் பரப்பளவில் சோலார் பேனல்கள் வைத்து , 17.4 டெராவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதன் பரப்பளவானது 43,000 சதுர மைல்கள் ஆகும்.
சஹாரா பாலைவனம்:
ஆனால் ஆப்பிரிக்காவில் உள்ள சகாரா பாலைவனம் 3.6 மில்லியன் சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. அங்கு ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேல் சூரிய ஒளி விழுவதால், சூரிய சக்திக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. அதாவது சஹாரா பாலைவனத்தின் 1.2 சதவிகித நிலப்பகுதியில் பெறப்படும் சூரிய ஆற்றலில், உலகின் அனைத்து எரிசக்தி தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமானது.
இந்த திட்டத்தின் செலவு சுமார் ஐந்து டிரில்லியன் டாலர்களாக இருக்கும். இந்த செலவு அமெரிக்க தேசிய கடனில் 1/4 பங்கு மற்றும் உலகத்தின் ஒரு வருட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% க்கு சமமாகும் . எனவே உலகின் மற்ற செலவுகளுடன் ஒப்பிடும்போது இந்த செலவு மிகவும் சிறியது. நிலக்கரி, எண்ணெய், காற்று, புவிவெப்பம், அணு சக்தியுடன் ஒப்பிடுகையில் இது சிறந்த முறை. மற்ற ஆற்றல் வடிவங்களில் எதிர்காலம் இல்லை. இருபது, முப்பது ஆண்டுகளில் சூரிய ஒளி எல்லாவற்றையும் மாற்றிவிடும்.
செலவு குறைவாகும்:
அணு உலையின் மூலம் 1 ஜிகாவாட் உற்பத்தி செய்ய ஆகும் செலவு சுமார் மூன்று பில்லியன் டாலர்கள் ஆகும். உலகத்துக்கு தேவையான 17.3 டெராவாட் மின்சாரம் அளவை, அணு உலை மூலம் உற்பத்தி செய்ய ஆகும் செலவு ஐம்பத்திரண்டு டிரில்லியன் டாலர்கள். இது சூரிய சக்தியை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, அணுசக்திக்கு ஒரு முக்கிய பயன்பாடு உள்ளது. சூரிய ஒளி குறைவாக இருக்கும்போது அணுசக்தி பயனுள்ளதாக இருக்கும் என அணுசக்தி நிபுணர் மெஹ்ரான் மொலேம் தெரிவித்தார். இவர் தெரிவித்துள்ள கருத்தை போர்ப்ஸ் செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது.