இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடுவதையொட்டி #ReadyForRishi என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்த போரிஸ் ஜான்ஸன்:
2019ம் ஆண்டு இங்கிலாந்தின் பிரதமராக போரிஸ் ஜான்ஸன் பதவியேற்ற நிலையில், அவரது கட்சிக்குள்ளேயே சுமார் 50 அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியதையடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அப்படி போரிஸ் ஜான்சனுக்கு எதிராக போர்க்கொடித் தூக்கியவர்களில் ரிஷி சுனக்கும் ஒருவர். போரிஸ் ஜான்ஸனின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக், இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகளைத் திருமணம் செய்திருக்கிறார்.
யார் இந்த ரிஷி சுனக்:
இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார் ரிஷி சுனக். ரிஷி சுனக்கின் மூதாதையர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கிழக்கு ஆப்பிரிக்காவிற்குச் சென்ற அவர்கள் பின்னர் இங்கிலாந்திற்கு 1960களில் குடிபெயர்ந்தனர். இங்கிலாந்து சென்ற ரிஷி சுனக்கின் பாட்டி இங்கிலாந்தின் சவுதாம்ப்ட்டனில் ஒரு வேலையைத் தேடிக்கொண்டார். ஓராண்டு அங்கு வேலை செய்து பணம் சேர்த்தபின்பு, தனது கணவர் மற்றும் குழந்தைகளை அங்கு அழைத்துக்கொண்டார். அந்த குழந்தைகளில் ரிஷி சுனக்கின் தாய் உஷா சுனக்கும் ஒருவர். அவர் இங்கிலாந்து சென்றபோது அவருக்கு 15 வயது ஆகியிருந்தது. நன்றாக படித்த உஷா சுனக் மருந்தாளுனரானார். அங்கு தான் ரிஷியின் தந்தையும் மருத்துவருமான யஷ்வீரை சந்தித்தார். திருமணம் செய்துகொண்ட இருவரும் சவுத்தாம்ப்ட்டனிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டனர். யஷ்வீர் மற்றும் உஷா சுனக் ஆகியோருக்குப் பிறந்த 3 பேரில் மூத்தவர் தான் ரிஷி சுனக். இவர்தான் தற்போது இங்கிலாந்து பிரதமர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இது தொடர்பாக ரிஷிசுனக் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரிஷி சுனக் வெளியிட்டுள்ள வீடியோ:
அதில், “குடும்பம் தான் எனக்கு எல்லாமும். எனது பெற்றோர், அவர்கள் கனவு கண்டவற்றிற்கான வாய்ப்புகளை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர். பிரிட்டன், தங்கள் பெற்றோர்களைப் போல பல லட்சம் பேருக்கு நல்ல எதிர்காலத்தைக் கொடுத்தது. நான் அரசியலுக்குள் வரக்காரணம், எனக்குக் கிடைத்த அதே வாய்ப்புகளை இந்நாட்டில் உள்ள அனைவருக்கும் , அவர்களது குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக வழங்க வேண்டும் என்பதற்காக தான்.”
“நமது நாடு பல்வேறு சிக்கல்களை பல்வேறு தலைமுறைகளாக எதிர்கொண்டு வருகிறது. இப்போது நாம் எடுக்கும் முடிவுகள் தான் அடுத்த தலைமுறை ப்ரிட்டிஷ் மக்களும் நல்ல எதிர்காலத்தைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். நாம் இந்த தருணத்தை உண்மையுடனும், தீவிரத்துடனும், உறுதியுடனும் எதிர்கொள்ளப் போகிறோமா? அல்லது நம்மை சிறப்பாக உணரவைக்கும் ஃபேரி டேல்ஸ் கதையைப் போல நம்மை சமாதானப்படுத்திக்கொள்ளப் போகிறோமா?” என்று ரிஷி சுனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமராகும் ரிஷி சுனக்? :
மேலும், “இந்த தருணத்தை விட்டு நமது குழந்தைகளின் நாளைய தருணத்தை மோசமாக்கப்போகிறோமா? யாராவது இந்த தருணத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சரியான முடிவை எடுக்க வேண்டும். அதனால் தான் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்தத் தலைவராகவும், உங்களது பிரதமராகவும் நான் நிற்கிறேன். நான் இந்த நாட்டை சரியான திசையில் வழிநடத்த விரும்புகிறேன். நான் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் கடினமான துறையை கடினமான நேரத்தில் வழிநடத்தியிருக்கிறேன். எனது கொள்கைகள் சமரசத்திற்குட்படாதது. வரும் நாள்கள் மற்றும் வாரங்களில் நமது நாட்டின் சிறந்த எதிர்காலத்தை எப்படி உருவாக்க முடியும் என்பது குறித்த எனது தொலைநோக்கு சிந்தனையை தெரியப்படுத்துவேன்” என்று ரிஷி சுனக் கூறியிருக்கிறார்.
தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.